நமது தினசரி வாழ்விற்கு தாது உப்புக்களின் தேவை அத்தியாவசியமானது. அவற்றில் ஜிங்க் எனும் துத்தநாக தாதுஉப்பின் தேவை மிகவும் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தசைகள் உருவாகவும், ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் இது உதவுகிறது. பல உடலியல் செயல்பாட்டிற்கு தேவையான செல் செயல்பாடு, மரபணுக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை சரிசெய்தல் இதன் பணி. 125 ஆண்டுகளுக்கு முன்னர்தான் துத்தநாக சத்தின் அவசியம் உலகிற்கு தெரியவந்தது. அமெரிக்க நேஷனல் ரிசர்ச் சென்டர் ஒரு நாள் தேவையாக 15 மில்லி கிராம் துத்தநாகத்தை எடுத்துக்கொள்ளச் சொல்கிறது.
துத்தநாக சத்து வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும், பெண்களின் கூந்தல் ஆரோக்கியம் காக்கும், இளமை காக்கும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும், பெண்களின் கருமுட்டை வளர்ச்சி, மாதவிடாய் சுழற்சிக்கு உதவுவதோடு, மலட்டுத்தன்மையையும் போக்குகிறது. பிரிரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து கண்களை காக்கிறது. 30 வயதைக் கடந்த பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் முதுகு வலியை தவிர்க்கிறது. இள வயது பெண்கள் சந்திக்கும் PMS பிரச்னைகளை சரி செய்கிறது. ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்திருக்கவும், சருமம் மற்றும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கவும் இது உதவுகிறது.
அடிக்கடி சளி பிடித்தல், காய்ச்சல், ஒரு நோயிலிருந்து விடுபட அதிக காலமாகுதல் போன்றவை துத்தநாக குறைபாட்டால் வரும் நோய் எதிர்ப்பாற்றல் பலவீனத்தால் வருகிறது. அடிபட்டாலோ அல்லது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டாலோ ஏற்படும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளின் காயம் ஆறுவதற்கு வழக்கத்தை விட அதிக காலம் ஆகிறதா? அது துத்தநாக குறைபாட்டால் வரலாம் என்கிறார்கள்.
திடீரென்று உங்கள் தலைமுடி மெலிதாகி, அதிகம் கொட்டுகிறதா? தலைமுடியில் வேறு பிரச்னைகள் ஏற்படுகிறதா? அது துத்தநாக உப்பு குறைபாட்டால் இருக்கலாம் என்கிறார்கள். திடீரென்று உங்கள் சருமம் உலர்ந்து போகுதல், அரிப்பு, கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் தோன்றுகிறதா? தொடர்ந்து சருமப் பிரச்னைகள் ஏதேனும் தொடர்கிறதா? அது துத்தநாக குறைபாட்டால் வந்து இருக்கலாம் என்கிறார்கள்.
திடீரென உங்களுக்கு சுவை மற்றும் உணவின் வாசனை நுகர்வில் குளறுபடிகள் தோன்றுகிறதா? உங்களால் வாசனையை நுகர முடியாமல், துர்வாசனையை நுகர்கிறீர்களா! அது துத்தநாக குறைபாட்டால் இருக்கலாம். உங்கள் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக உங்களுக்கு பசியின்மை, திடீரென்று உடல் எடை குறைதல் போன்றவை ஏற்பட்டு, அது வேறு எந்த நோய் அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், அதுவும் துத்தநாக குறைபாட்டால் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறதா? செயல்பாடுகளில் ஆர்வம் குறைகிறதா? அது துத்தநாக குறைபாட்டால் ஏற்பட்டிருக்கலாம்.
துத்தநாக உப்பின் அவசியத்தை தெரிந்துகொண்டோம். இனி, அதைப் பெற உதவும் உணவுகளைப் பார்ப்போம். துத்தநாக உப்பு ஒரு நாள் தேவை ஆண்களுக்கு 11 மி.கிராம், பெண்களுக்கு 8 மி.கிராம்.
துத்தநாக சத்து அதிகமுள்ள உணவுகளாக பசலைக்கீரை, கேல் கீரை, காளான், முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ், பாதாம், முந்திரி, கார்ன் பிளேக்ஸ், பால், ஓட்ஸ், சீஸ், கோழிக்கறியின் நெஞ்சு பகுதியில், மாட்டின் இறைச்சி, பன்றி இறைச்சியில் ஜிங்க் சத்து உள்ளது.
ஒரு கப் கொண்டைக்கடலையை அவித்தால், அதில் 2.5 மில்லி கிராம் ஜிங்க் உள்ளது. இறால், சிப்பி, நண்டு உள்ளிட்ட உணவுகளில் ஜிங்க் சத்து உள்ளது. இவை குறைந்த அளவு கலோரிகளைக் கொண்டது. இதனால் உடல் எடை குறைக்க உதவும். பூசணி விதையில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஜிங்க் சத்து உள்ளது. வேர்கடலையில் கூட ஜிங்க் சத்து அதிகமாக உள்ளது. ஒரு கப் அவித்த கருப்பு பீன்ஸில் 2 மில்லி கிராம் ஜிங்க் உள்ளது. மேலும் இதில் நார்சத்து, புரதச் சத்து, இரும்புச் சத்து உள்ளன.
ஒரு கப் தயிரில் 1.5 மில்லி கிராம் ஜிங்க் உள்ளது. இது ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். ஒரு முட்டையில் 0.6 மி.கி. துத்தநாக சத்து உள்ளது. அவகோடா பழம், மாதுளம் பழம், பிளாக் பெர்ரி, கொய்யா, ஆப்ரிகாட், கிவி மற்றும் பாகற்காய் போன்றவற்றில் துத்தநாக சத்து நிறைந்துள்ளது.
துத்தநாக சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறவர்களின் முதுமை தள்ளிப்போகிறது என்கிறார்கள் ஜெர்மனியின் நூரம்பர்க் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். துத்தநாக சத்து உடலில் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் பாதிப்பை குறைப்பபதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
துத்தநாகம் தொடர்பான உணவுகள் வயிற்றுப்போக்கை கட்டுப்பாட்டில் வைக்கும் ஆற்றல் மிக்கது என்பதை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வு கூறுகிறது.
தினமும் 4 மில்லி கிராமுக்கு இணையான துத்தநாக உப்பு உணவுகளை எடுத்துக்கொண்டால் அது நமது மரபணு செல்களுக்கு ஊக்கம் அளித்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது என்கிறார்கள் யூனிசெப் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். கர்ப்ப காலத்தில் தாய் சாப்பிடும் உணவின் எதிரொலி அடுத்த தலைமுறைக்கு மட்டுமின்றி, அதற்கு அடுத்த இரு தலைமுறைகளுக்கும் மரபணுவில் நல்ல மாற்றங்களை துத்தநாக சத்து நிறைந்த உணவுகள் தருவதாக கண்டறிந்துள்ளனர்.