சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வருபவர்கள் அவர்களின் புரதச் சத்தின் தேவைகளுக்கு தினசரி உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டியவை பயறு மற்றும் பருப்பு வகைகள். இவற்றில் புரதச் சத்து மட்டுமின்றி, வேறு பல இன்றியமையாத ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பிட்ட 5 வகை லெக்யூம்ஸ் 'பவர் ஹவுஸ்' என்று வர்ணிக்கும் அளவுக்கு சத்துக்களை வழங்கக் கூடியவை. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதிகளவு நார்ச்சத்தும் புரோட்டீனும் நிறைந்தது பிளாக் பீன்ஸ். இது செரிமானம் சிறப்பாக நடைபெறவும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும், இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீ ரேடிக்கல்கள் மூலம் செல்களில் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கவும் செய்கின்றன.
கொண்டைக் கடலையில் உள்ள அதிகளவு நார்ச்சத்தும் புரோட்டீனும் அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து எடைப் பராமரிப்பிற்கு உதவுகிறது. மேலும், இது உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து மற்றும் ஃபொலேட் ஆகிய மினரல்களையும் தருகின்றது.
துவரம் பருப்பு, மசூர் தால், பாசிப்பருப்பு போன்றவற்றில் மிக அதிக ஊட்டச் சத்துக்கள் உள்ளன. இவற்றில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்களுடன் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்களும் உள்ளன. இவை நல்ல கொழுப்பின் அளவை உயர்த்தவும் இதய ஆரோக்கியம் காக்கவும் உதவுகின்றன.
கிட்னி பீன்சில் புரோட்டீன், ஃபொலேட், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இதயம், தசைகள், ஜீரண மண்டலம் மற்றும் எலும்புகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவுகின்றன.
பச்சைப் பட்டாணியில் கொழுப்புச் சத்து குறைவாகவும், நார்ச்சத்தும் புரோட்டீனும் அதிகளவிலும் உள்ளன. மேலும் இதில் வைட்டமின் A, C, K யுடன் பல ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை அனைத்தும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்யவும் உதவுகின்றன.
இத்தகைய உடலுக்குத் தேவையான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இந்த 5 வகைப் பயறு வகைகளை அனுதினமும் உட்கொண்டு நலமுடன் வாழ்வோம்.