சிவப்பு மிளகாய்களை ரோஸ்ட் பண்ணி நசுக்கி சிறு சிறு துகள்களாக்கி எடுப்பதே சில்லி ஃபிளேக்ஸ் ஆகும். இதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சில்லி ஃபிளேக்ஸில் உள்ள கேப்ஸைசின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு காரமான சுவையைத் தருகிறது. இதிலுள்ள மற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கிழைக்கும் ஃபிரி ரேடிகல்களை எதிர்த்துப் போராடி உடலில் தோன்றும் வீக்கங்களைக் குறைக்கவும், நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கவும் உதவுகின்றன.
கேப்ஸைசின் உடலில் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. அந்த இயக்கத்தின்போது அதிகளவு கொழுப்பும் கலோரிகளும் எரிக்கப்படுகின்றன. இத்துடன் தொடர் உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் எடுத்துக்கொண்டால் உடல் எடையை சமநிலையில் வைத்து சிறப்பாகப் பராமரிக்க முடியும்.
சில்லி ஃபிளேக்ஸில் உள்ள உஷ்ணத் தன்மையானது, வயிற்றுக்குள் சுரக்கும் ஜீரணத்துக்கு உதவக்கூடிய அமிலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து ஜீரணம் நல்ல முறையில் நடைபெற உதவுகிறது. மேலும், அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படுவதைக் குறைக்கவும் உதவும்.
சில்லி ஃபிளேக்ஸ் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறவும் உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது. இதிலுள்ள கேப்ஸைசின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைக்கவும், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.
சந்தோஷமும் ஆரோக்கியமும் நிறைந்த மனநிலை தரக்கூடிய ஹார்மோன்களான என்டோர்ஃபின் (endorphins)களை அதிகளவு சுரக்கவும் சில்லி ஃபிளேக்ஸ் உதவி புரிகிறது.
சில்லி ஃபிளேக்ஸை பீட்சா, பாஸ்தா, சாலட் போன்றவற்றின் மீது குறைந்த அளவில் தூவி உண்ணலாம். அசிடிட்டி மற்றும் வேறு வகையான ஜீரணக் கோளாறுகள் உள்ளவர்கள் இதை மிகக் குறைவான அளவிலேயே எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.