நமது உடலின் ஆரோக்கியத்தை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுவது ஃபுட் காம்பினேஷன். அதாவது, ஒவ்வொரு வகையான உணவை எடுத்துக்கொள்ளும்போதும் அது சிறப்பாக ஜீரணமாகி அதன் சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படுவதற்கு நல்ல முறையில் உதவக்கூடிய இன்னொரு வகை உணவையும் அதனுடன் இணைத்து உண்பதே ஃபுட் காம்பினேஷன் ஆகும்.
ஆயுர்வேத நியமப்படி முறையாக உணவுகளை இணைத்து உண்பது சிறப்பான ஜீரணம், சத்துக்களை முழுமையாக உறிஞ்ச, சக்தியை சமநிலைப்படுத்த என இம்மூன்று இயக்கங்களுக்கும் உதவி புரியும். எந்த உணவுடன் எதை இணைத்து உட்கொண்டால் முழுமையான பலன் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சாதத்துடன் நெய் சேர்த்து உண்பது மிகச் சரியான காம்பினேஷன். நெய் சிறப்பான ஜீரணத்துக்கும், சாதத்திலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படவும் உதவி புரியும்.
மஞ்சளும் மிளகும் இணையும்போது, மஞ்சளில் இருக்கும் குர்க்குமின் என்ற ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்ட ஒரு கூட்டுப்பொருளின் உயிர்த்தன்மை வழங்கும் சக்தி பன்மடங்கு உயர்கிறது.
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து காலை வேளையில் அருந்துவது உடலின் நச்சுக்களை வெளியேற்றவும், செரிமானம் சீராக நடைபெறவும், மெட்டபாலிசம் நல்ல முறையில் நடைபெறவும் உதவும்.
பழத் துண்டுகளுடன் யோகர்ட்டை இணைத்து உண்ணும்போது இயற்கையான இனிப்புச் சத்தும் நுண்ணுயிர்ச் சத்துக்களும் சேர்ந்து மனதுக்கு இதமான உணவாகிறது. இது ஜீரண மண்டல உறுப்புகளுக்கு ஆரோக்கியம் அளித்து, அந்த நாளை நிறைந்த ஊட்டச்சத்துக்களோடு ஆரம்பிக்க உதவும்.
சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகளை இணைத்து தயாரிக்கப்படும் மசாலாவை உபயோகித்து சமைக்கப்படும் உணவுகளின் சுவை கூடும்; ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
வெது வெதுப்பான பாலில் குங்குமப் பூ சேர்த்து இரவில் படுக்கப்போவதற்கு முன் அருந்துவது ஆழ்ந்த அமைதியான உறக்கம் தரும்.
க்ரீன் டீயுடன் லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தும்போது, க்ரீன் டீயிலுள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் லெமனில் உள்ள வைட்டமின் C யும் சேர்ந்து உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆரோக்கிய மேன்மையும் தரக்கூடிய சிறந்த பானமாகிறது. இது மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும் உதவும்.
வாழைப்பழத்தை நெய்யில் தொட்டு உண்ணும்போது, பழத்தில் உள்ள இனிப்புச் சத்தும் நெய்யில் உள்ள நல்ல கொழுப்புகளும் சேர்ந்து அந்த உணவை கூடுதல் சத்துடையதாக ஆக்குகின்றன.
முழு தானியங்களால் சமைக்கப்பட்ட உணவுடன் பல வகையான காய்கறிகளை சேர்த்து உண்ணும்போது அது ஓர் ஆரோக்கியம் நிறைந்த உணவாகிறது. இச்சிறப்பிற்கு தானியங்களிலுள்ள கார்போஹைட்ரேட்களும், காய்கறிகளில் உள்ள நார்ச்சத்தும் வைட்டமின்களுமே காரணமாகும்.
மேற்கூறிய இணைப்புகளை நாமும் பின்பற்றுவோம்; உடல் ஆரோக்கிய மேன்மை பெறுவோம்.