Malaikka vaikkum Malai Vaazhai pazhathin Arokkiya Nanmaigal 
ஆரோக்கியம்

மலைக்க வைக்கும் மலை வாழைப்பழத்தின்ஆரோக்கிய நன்மைகள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

பொதுவாகவே, வாழைப்பழம் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை தன்னகத்தே கொண்டு உடல் நலத்துக்கு நன்மை செய்கிறது. அதைப்போலவே, மலை வாழைப்பழமும்  பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மலை வாழைப்பழத்தில் சிறு மலைப்பழம், பெரு மலைப் பழம் என்று இரண்டு வகைகள் உள்ளன. பெரு மலை வாழைப்பழம் , உடலுக்கு அதிக சூட்டை தருவதால் அதை குளிர் பிரதேசங்களில் வாழும் மக்கள் சாப்பிட உபயோகிக்கலாம்.

செரட்டோனின் என்னும் ஹார்மோன் நமக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. மேலும், செல்களின் அழிவைத் தடுத்து நமது உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. மலை வாழைப்பழத்தில் இது இயற்கையாகவே இருப்பதால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

நீர் பற்றாக்குறை காரணமாக சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை மலை வாழைப்பழம் உடனே போக்குகிறது. அதேபோல், கர்ப்பிணி பெண்களுக்கு ஆறு, ஏழு மாதங்களில் உண்டாகும் மலச்சிக்கலுக்கும் மலை வாழைப்பழம் சிறந்த தீர்வாக உள்ளது. பிரசவத்துக்குப் பின் தாய்ப்பால் சுரப்புக்கு மலை வாழைப்பழம் பேருதவியாக இருக்கிறது.

உடலில் நீர்ச்சத்து இல்லாதவர்கள் மற்றும் தொடர்ந்து சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் மலை வாழைப்பழத்தை  சாப்பிடுவதன் மூலம் உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

மலை வாழைப் பழத்தை நீரிழிவு நோயாளிகளுக்கும் தாராளமாகக் கொடுக்கலாம். மலைப்பழத்துடன் கற்கண்டு, தேன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களுக்கு உண்டான மந்தத்தைப் போக்கி பசியைத் தூண்டும். இரத்த சோகையை போக்கி இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் தன்மை மலை வாழைப் பழத்துக்கு உண்டு.

இதில் 80 கலோரிகள் இருப்பதால் உடல் பருமனாக இருப்பவர்கள் தாராளமாக மலை வாழைப் பழத்தை சாப்பிடலாம். மலக்குடலில் உண்டாகும் புற்றுநோயைத் தடுப்பதில் மலை வாழைப்பழத்துக்கு பெரும் பங்குண்டு. அதேமாதிரி, உண்ணும் உணவை வேகமாக ஜீரணிக்கும் தன்மையும் மலைவாழைப் பழத்துக்கு உண்டு. இந்தப் பழத்தில் சோடியம் அதிகம் உள்ளதால், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மலை வாழைப்பழத்தை தவிர்த்தல் நல்லது.

இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட மலை வாழைப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT