பொதுவாக சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சுவை அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட பயப்படுவதைப் போன்று, இனிப்பு சுவை அதிகம் உள்ள பழங்களை சாப்பிடுவதற்கும் விரும்புவதில்லை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடக்கூடிய ஒரே பழம் என்றால் இந்த சிவப்பு கொய்யா பழத்தை சொல்லலாம். சிவப்பு கொய்யாவில் உள்ள சிறப்பான நற்பலன்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய அன்றாட பயன்பாட்டில் உள்ள அனைத்து பழங்களிலும் சிறப்பான நற்பலன்களை கொடுக்கக் கூடிய ஒரு பழமாக சிவப்பு கொய்யா விளங்குவதாக ஹைதராபாத்தில் இயங்கி வரும் தேசிய உணவியல் கழகம் தனது ஆராய்ச்சியில் வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தினை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது மலச்சிக்கல் பிரச்சினையால்தான். வயதான காலத்தில் பல்வேறு நோய்களின் காரணமாக அதிகமாக மாத்திரைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு மலச்சிக்கல் என்பது ஒரு தீராத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. சிவப்பு கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் அதில் உள்ள நார்ச் சத்துக்களின் காரணமாக இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கிறது.
மேலும் மற்ற பழங்களை அதிகமாக உட்கொள்ளும் போது அதில் உள்ள இனிப்பு சுவையின் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் மிதமான இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை உள்ள சிவப்பு கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். கொய்யா பழத்தை எப்போதும் சாப்பிடும் போது காய் பதத்தில் சாப்பிடுவது தான் நல்லது. பழமாக சாப்பிடுவதை விட துவர்ப்பு சுவையோடு கூடிய காய் பதத்தில் அதுவும் விதைகளுடன் சேர்த்து சாப்பிடுவது சிறந்த நற்பலன்களைத் தரும்.
இதில் விட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. உடல் உஷ்ணமாக இருப்பவர்கள் உடலை குளிர்ச்சி அடைய செய்ய இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சிவப்பு கொய்யாவில் லைகோபின் என்ற சத்து உள்ளது. இதுதான் அதில் உள்ள சிவப்பு நிறத்துக்கு காரணம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கப்பட்டு நோய் தடுப்புகளாக செயல்படுகிறது. சிவப்பு கொய்யாவில் ஆரஞ்சு பழத்தை விட 4 மடங்கு விட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் ஈறு சம்பந்தப்பட்ட நோயான ஸ்கர்வி நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் பல் சம்பந்தமான நோய்களான வாய்ப்புண், பல் வலி, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்வதற்கும் பற்களில் உள்ள கிருமிகளை அழிப்பதிலும் கொய்யாப்பழம் முக்கிய பங்காற்றுகிறது.
கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் போன்றவை வராமல் தடுப்பதில் கொய்யா முக்கிய பங்காற்றுகிறது.
இதயத்தில் உள்ள ட்ரை கிளிசரைடு எனும் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் போன்ற இதய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். கொய்யா பழத்தில் போலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வது நல்லது.இதன் மூலம் வயிற்றில் உள்ள குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சியை சீராக பராமரிக்க முடியும்.
சிவப்பு கொய்யாவில் உள்ள மெக்னீசியம், தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வடையச் செய்ய உதவுவதால் உடல் அசதி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கொய்யா பழத்தில் இருந்து சாறு எடுத்து அருந்துவதன் மூலம் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க முடியும். இது மூளையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சிந்தனை திறனை மேம்படுத்த உதவுகிறது.
கொய்யா பழத்தில் உள்ள அதிகமான நார்ச்சத்துக்களின் காரணமாக இரப்பை மற்றும் குடல் இயக்கத்தை சரி செய்வதில் இது முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றுப் போக்கினை சரி செய்வதற்கும் இது பயன்படுகிறது. கொய்யா பழத்தில் செம்பு சத்து இருப்பதால் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து எடுத்து வரலாம். மேலும் ரத்தத்தின் திரவ தன்மையை பாதுகாத்து ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதிலும் கொய்யாப்பழம் முக்கிய பங்காற்றுகிறது.
முக்கிய குறிப்பு: பொதுவாக கொய்யா பழத்தை சாப்பிட்ட உடனே பலனை எதிர்பார்க்க முடியாது. ஆனால் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல்வேறு பலன்களை பெற முடியும். எப்போதும் கொய்யாப்பழத்தை விதையுடன் சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது. உப்பு மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை கொய்யா பழத்தின் மீது தூவி சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.