மனிதர்களின் மூளை வளர்ச்சி என்பது பொதுவாக இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் முடிவடைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளின் வளரிளம் பருவத்திலிருந்தே ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளச் செய்து அவர்களின் மூளையின் ஆரோக்கியத்தை வலுவடையச் செய்வது பெற்றோர்களின் கடமையாகிறது. அதற்கு அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியமான ஏழு உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மூளையின் இயக்கத்திற்குத் தேவையான சோலைன் (Choline) என்ற ஊட்டச்சத்து அதிகம் நிறைந்துள்ள முட்டை. பசலைக் கீரை, காலே, வாட்டர் கிரெஸ் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் மூளையின் வளர்ச்சிக்குத் தேவையான ஃபோலேட் என்ற சத்து அதிகம் உள்ளது. இவற்றை குழந்தைகளுக்குக் கொடுப்பது அதிக நன்மை தரும்.
மூளையின் ஆரோக்கியத்திற்குத் தேவையான மைக்ரோபயோம்களின் வளர்ச்சிக்கு க்ரீக் யோகர்ட் நன்கு உதவும். பிளைன் யோகர்ட்டுடன் நறுக்கிய பழத்துண்டுகளைச் சேர்த்து கொடுப்பது கூடுதல் நன்மை தரும்.
ஓட்ஸ் போன்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகளைக் கொடுப்பதால் குழந்தைகளுக்கு சீரான அளவுடன் தொடர்ந்து சக்தி வழங்க முடியும். நட்ஸ், பட்டர், நறுக்கிய பழத்துண்டுகள் போன்றவற்றை ஓட் மீல் மீது தூவிக் கொடுப்பது குழந்தைகளுக்கு உணவின் மீது கவர்ச்சி உண்டாக்கவும், சத்துக்களை அதிகரிக்கவும் உதவும்.
எல்லா வகை பருப்புகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் மூளையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிங்க் அதிகம் உள்ளது. இவற்றில் சூப், கறி அல்லது டிப் (Dip) செய்து கொடுக்கலாம்.
மூளையின் மேம்பட்ட ஞாபக சக்தி, கூர்ந்து கவனிக்கும் திறன் பிரச்னைகளுக்கு முடிவு காணும் சக்தி ஆகியவற்றிற்கு எரிசக்தி போல உதவி புரியக்கூடியது ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள். இவ்வகைச் சத்து, கொழுப்பு நிறைந்த சால்மன், மாக்கரெல் போன்ற மீன்கள், ஃபிளாக்ஸ், பூசணி, சன்ஃபிளவர் ஆகியவற்றின் விதைகள் மற்றும் வால்நட் கொட்டையில் அதிகம் நிறைந்துள்ளது.
லீன் மீட் (Meat), செரிவூட்டப்பட்ட செரியல்கள், பச்சை இலைக் காய்கறிகள், ராஜ்மா, பச்சைப் பட்டாணி, கொண்டைக் கடலை, காராமணி போன்ற பயறு வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள இரும்புச் சத்தும் மூளையின் ஆரோக்கியம் காக்க மிகுந்த நன்மை தரக்கூடியவை.
மேற்கூறிய உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு சர்க்கரை அதிகம் உள்ள இனிப்பு வகைகள், பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட மாவை உபயோகித்து செய்யும் உணவுகளைத் தவிர்ப்பதும் முக்கியம்.