கோடைகாலம் என்பது வெயில் அதிகமாக இருக்கும் காலமாக இருந்தாலும், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சரியான காலமாகும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், இந்த வெயில் காலத்தை சரியாக பயன்படுத்தினால் உடல் எடையை குறைக்க முடியும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் வெயில் காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
நீரேற்றத்துடன் இருங்கள்: கோடை மாதங்களில் நீரேற்றம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் செயல்பாடுகள் சீராகப் பராமரிக்கப்படுவது மட்டுமின்றி, செரிமானத்திற்கும் உதவி, வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர தர்பூசணி, வெள்ளரி மற்றும் சிட்ரஸ் பழங்கள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பருவ கால உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்: கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள். இத்தகைய உணவுகளில் கலோரி குறைவாகவும், உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடை குறைக்கவும் உதவும்.
உடற்பயிற்சியை நிர்வகிக்கவும்: கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நீங்கள் எப்போது உடற்பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்பதைத் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். முடிந்தவரை வெப்பம் அதிகம் இருக்கும் நேரத்தில் உடற்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது. அதிகாலை வேலை அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்வது நல்லது. இது தவிர நீச்சல், நடைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், பீச் வாலிபால் போன்ற கலோரிகளை அதிகமாக எரிக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.
இன்டர்மீடெட் பாஸ்டிங்: பகுதி நேர உணவுக் கட்டுப்பாட்டை பயிற்சி செய்ய சரியான காலம் கோடை காலம்தான். நீங்கள் எதுபோன்ற உணவுகளை உட்கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள் எந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களது உடல் எடையைக் குறைக்க முடியும். எனவே அதிகமாக உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தாமல், உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தினால், நிச்சயம் உங்களது உடல் எடையைக் குறைக்க முடியும்.
சர்க்கரை உணவுகள் வேண்டாம்: கோடைகாலத்தில் சர்க்கரை அதிகம் நிரம்பிய குளிர்பானங்களை குடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், இத்தகைய குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. இவற்றிற்கு பதிலாக இயற்கை இனிப்பு நிறைந்த பழச்சாறு குடிப்பது நல்லது. முடிந்தவரை சர்க்கரை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்: எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு போதுமான தூக்கம் அவசியம். இது உங்கள் உடலின் இயற்கை செயல்முறைகளை முறையாகப் பராமரித்து பசி ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த உதவும். எனவே தினசரி 7-8 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கூடுதலாக தியானம், யோகா போன்றவை உங்களது மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.