பேரீச்சம் பழத்தை நெய்யில் ஊற வைத்து உண்ணும்போது அவற்றில் இருக்கும் ஊட்டச் சத்துக்களானது மேலும் பன்மடங்கு நன்மைகளைத் தருகின்றன. அது எவ்வாறு என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
பேரீச்சம் பழத்தில் இருக்கும் இயற்கையான இனிப்புச் சத்து உடலுக்கு உடனடி சக்தி தருகிறது. நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து உள்ளது. இவை இரண்டும் உடலுக்கு தொடர்ந்து சக்தியளித்து திருப்தியான உணர்வைத் தருகின்றன. மேலும், இவை இரண்டும் சேரும்போது ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது; உடல் புத்துணர்ச்சி பெற்று இயங்குகிறது. பேரீச்சம் பழம் நெய்யுடன் சேரும்போது, அதிலுள்ள இரும்புச் சத்தின் அளவு கூடுகிறது. உடலுக்குள் அதிகளவு இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதால் இரும்புச் சத்து குறைபாடு நீங்கி இரத்த சோகை நோய் வருவது தடுக்கப்படும். இவை இரண்டையும் சேர்த்து உண்ணும்போது சருமத்துக்கு அதிகளவு ஊட்டச்சத்து கிடைத்து சரும மினுமினுப்பு பெறுகிறது; தோற்றத்தில் இளமை நீடிக்கிறது. இவற்றிலுள்ள மைக்ரோபியல் குணமானது நோயெதிர்ப்புச் சக்திக்கு வலு சேர்க்கிறது; தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.
பேரீச்சம் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் சத்துக்களை உடலுக்குள் உறிஞ்ச நெய் உதவி புரிகிறது. நார்ச்சத்து சிறப்பான செரிமானத்துக்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் நீக்குகிறது. நெய்யின் நெகிழ்வான தன்மையும் நல்ல ஜீரணத்துக்கு உதவுகிறது. பேரீச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிக்க உதவுகிறது. நெய்யை அளவோடு சேர்த்து உட்கொண்டால் அதிலுள்ள நல்ல கொழுப்பு இதய ஆரோக்கியம் காக்கும். பேரீச்சம் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. நெய் இவற்றிற்கு மேலும் வலுவூட்டி உடலின் ஒட்டுமொத்த எலும்புகளின் கட்டமைப்பிற்கும் உறுதுணை புரிகிறது.
இவை இரண்டிலும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கின்றன; உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றன.
இத்தனை நன்மைகள் கொண்டுள்ள இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அளவோடு உட்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.