கோடை காலம் தொடங்கிவிட்டத. இனி வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் போது நீரிழிவு நோயாளிகள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியமாகும். அதிக வெப்பம், நீரிழப்பு மற்றும் சில சூழ்நிலை மாற்றங்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு சவால்களை ஏற்படுத்தும்.
இருப்பினும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், கோடைகாலத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பதில் இருந்து நீரிழிவு நோயாளிகள் விடுபட முடியும். இந்தப் பதிவில் நீரிழிவு நோயாளிகள் கோடைகாலத்தில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
நீரேற்றத்துடன் இருங்கள்: கோடைகாலத்தில் நீரிழிவு நோயை நிர்வகிக்க நீங்கள் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிக வெப்பநிலை மற்றும் அதிக உடல் செயல்பாடு நீரிழப்புக்கு வழிவகுத்து, ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். எனவே உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் நாள் முழுவதும் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும். சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்துவிடுவது நல்லது.
உங்கள் மருந்துகளைப் பாதுகாக்கவும்: கோடைகால வெப்பம், இன்சுலின் மற்றும் பிற நீரிழிவு மருந்துகளை சேதப்படுத்தும். எனவே உங்கள் மருந்துகளை நேரடி சூரிய ஒளியிலிருந்து விலக்கி, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்கவும்: உங்களுடைய உடல் உழைப்பு, உணவு முறை மற்றும் கோடை வெப்பத்தால் இரத்த சர்க்கரை அளவு பாதிக்கப்படலாம். எனவே உங்கள் ரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணித்து, அதில் ஏதேனும் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் முறையான சுகாதார வல்லுநரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
உணவுகளை சரியாகத் திட்டமிடுங்கள்: கோடைகாலத்தில் பலர் பிக்னிக், டூர், விடுமுறை கொண்டாட்டம் என வெளியே செல்ல திட்டமிடுவதால் அங்கே ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வது சவாலாக அமைகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் வெளியே செல்லும்போது எத்தகைய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் நிறைய பழங்கள், காய்கறிகள், லீன் புரோட்டின், முழு தானியங்கள் சேர்க்கவும். எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக ஆவியில் வேகவைத்த அல்லது சுட்ட உணவுகளைத் தேர்வு செய்யவும். இது உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
சருமத்தைப் பாதுகாக்கவும்: சூரிய ஒளி மன அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். மேலும் உங்களது சருமத்தைப் பாதுகாக்க வெளியே செல்வதற்கு முன் அதிக SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. இது உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவும். வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பி பயன்படுத்துங்கள். காற்று எளிதாக ஊடுருவக்கூடிய மெலிதான மற்றும் வெளிர் நிற உடைகளை அணியுங்கள். முடிந்தவரை சூரிய ஒளியிலிருந்து விலகி நிழலிலேயே இருங்கள்.
இப்படி, கோடைகாலத்தில் நீரிழிவு நோயாளிகள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். இது உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும். இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்களுக்குத் தெரிந்த நீரிழிவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பகிர்ந்து, அவர்களையும் கோடைகாலத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லுங்கள்.