

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றா மூத்த குடி தமிழ் குடி. அப்படிப்பட்ட ஆதி தமிழன் என்று சொல்லக்கூடிய பழந்தமிழன் இசைத்த இசை கருவி பறை (parai) ஆகும். பறை இசைக்கும் போது தன்னை அறியாமல் ஒரு உணர்வு ஏற்பட்டு மெய் சிலிர்த்து போகிறது. இது பறை இசைக்கே உரித்தான ஒரு பண்பாகும். இந்த பறை இசையானது அனைத்து நிகழ்வுகளிலும் பாமர மக்களுடன் ஒன்றிணைந்து காலம் காலமாக தசையோடு இணைந்துள்ளது. இப்படிபட்ட பறை இசையைப் பற்றி விரிவாய் இக்கட்டுரையில் காண்போம்.
பறை இசையின் வரலாறு:
அந்த காலத்தில் வாழ்ந்த ஆதி தமிழன் காடுகளுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு காளை மாடுகள், எருமை மாடுகள், பசுமாடுகள் போன்ற விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை உணவாக சாப்பிட்டான். அப்பொழுது அந்த விலங்குகளின் தோலை மரத்தில் தூக்கி எறிந்து விட்டான். அந்த மாட்டின் தோலானது மரத்திலேயே நன்றாக காய்ந்துவிட்டது.
அது காற்று அடிக்கும் போது அந்த மரக்கிளையில் உள்ள குச்சிகளின் மீது பட்டு ஒருவிதமான ஒலியை எழுப்பியது. அந்த ஒலியை கண்ட தமிழன் அதனையே ஒரு கருவியாக மாற்றி விலங்குகளை வேட்டையாடுவதற்கும், மற்ற மனிதர்களுடன் மொழித்தொடர்பு கொள்வதற்கும், விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டான்.
இப்படி உருவான அந்த பறை இசைக் கருவியை தன்னுடைய வாழ்க்கையில் போரில் வெற்றி அடைந்தால் அதனை தெரிவிப்பதற்கும் மக்களுக்கு ஒரு செய்தியை தெரிவிப்பதற்கும் திருமணம், சிறு தெய்வ வழிபாடு, பொங்கல் பண்டிகைகள், அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இறப்பு வீடு என்று மனிதனின் வாழ்வியலோடு பறை இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கிறது. இறப்பு வீடுகளில் ஒலிக்கும் பறை இசையானது இறந்தவர்களின் உடலில் உள்ள செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
பலவிதமான பறைகள்:
ஆதி தமிழர்கள் வாழ்ந்த ஐவகை நிலங்களிலும் பறையானது பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சி நிலத்தில் தொண்டகப்பறை, முல்லை நிலத்தில் ஏறுகோட்பறை, மருத நிலத்தில் மணமுழா நெல்லரிகிணை, நெய்தல் நிலத்தில் மீன் கோட் பறை, பாலை நிலத்தில் துடி இப்படி பலவிதமான பறைகள் அந்த காலத்தில் இருந்தன. இப்பொழுது அவை புழக்கத்தில் இல்லாமல் ஒரு சில பறை (parai) இசை கருவிகள் மட்டுமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை
வீர பறை
வெற்றி பறை
போர்கள் முடிக்கும்
புனித பறை
கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா?
விரலை வெட்டி பறையின் இசையை நிறுத்த முடியுமா?
இது விடுதலை இசை
புது வீறு கொள் இசை
வேட்டையாடி வாழ்ந்த
எங்கள் பாட்டனின் இசை”
பறை இசை அடிவகைகள்:
பறையில் பல்வேறு வகையான அடிமுறைகள் உள்ளன. அவை சப்பரத்தடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயின்ட் அடி, மருள்அடி, சாமி பாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்புஅடி, வாழ்த்து அடி, சாமி புறப்பாட்டு அடி, நக்கல் அடி, நையாண்டி அடி, உருட்டு அடி, சாவு அடி என்ற அடி வகைகளும் இருக்கின்றன. இவை அனைத்தும் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அடிவகைகள் மாற்றப்பட்டு ஆதி தமிழன் இசைத்தகருவி என்று கூறப்படுகிறது.
சமூகத்தின் பார்வையில் பறை இசை:
ஒரு காலத்தில் பறை இசையை மக்கள் ஒரு இசையாக பார்க்காமல் அதனை இழிவாகப் பார்த்தார்கள். பறையை இசைக்கும் கலைஞர்களை பறையன் என்று அடையாளப்படுத்தினார்கள். இறப்பு வீட்டிலும் இந்த பறை ஒலிப்பதால் இந்த இசைக்கருவியை தீட்டு என்று கூறி இந்தப் பறை இசையையும் பறை இசை கலைஞனையும் ஒதுக்கி வைத்தார்கள். மாட்டு தோலில் இருந்து செய்வதால் மாடுகளை புனிதமாக கருதும் சில மக்கள் இந்த பறையை ஒரு பொருட்டாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று வரை இந்த சமூகத்தில் மக்கள் பறை இசையை கோவிலுக்குள் அனுமதித்ததில்லை. பறை (parai) இசை கலைஞர்களையும் அனுமதித்ததில்லை. அவர்கள் கோயில் வெளியே நின்று இசைக்கருவிகளை இன்றுவரை இசைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பறை இசையானது மக்களுடைய மகிழ்ச்சிக்கும் ஆடலுக்கும், பாடலுக்கும் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் அந்த பறையை வாசிக்கும் கலைஞர்களுக்கும் அந்தப் பறைக்கும் இந்த மனித சமுதாயம் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் மிகவும் குறைவு என்பது முக்கியமான ஒன்றாகும்.
வருடம் தோறும் நமது தமிழ்நாட்டில் கலையில் சாதனை செய்தவர்களுக்கும் கலையை வளர்ப்பவர்களுக்கும் கலைமாமணி என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. அதில் பல துறைகளை சார்ந்த இசைக்கலைஞர்கள் இந்த விருது கொடுத்து கௌரவப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், பறை இசையை தன் மூச்சாகவும் அந்த அந்த பறை இசைக்கலையை அழியாமல் இன்றுவரை தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வளர்த்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பறை இசை கலைஞர்கள் இருக்கும்போது அவர்களுக்கு அந்த கலைமாமணி என்ற விருது எட்டாக்கனியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைப் போல பறை இசையில் கலைமாமணி என்ற விருதை பல இன்னல்களுக்குப் பிறகு பனையூர் ராஜு என்ற பறை இசை கலைஞர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பறை ஒரு தகவல் தொடர்பு கருவி:
தமிழ்நாட்டில் பல இடங்களில் பறை இசைத்து செய்தி அறிவிக்கும் முறை இருந்து வந்துள்ளது.
திருச்செந்தூரில் கோயில் பூசை முடிந்ததைப் பறை இசைத்து பாஞ்சாலங்குறிச்சி வரைத் தெரிவித்துள்ளனர். அச்செய்தியைக் கேட்ட பின்பே கட்டபொம்மன் உணவு உட்கொண்டிருக்கிறார். அதுபோன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு பூசைமுடிந்த பின்பே மதுரையில் திருமலைநாயக்கர் செய்தி அறிந்து உணவு உட்கொண்டார் என்ற செய்தி மன்னர்கள் ஆட்சியில் பறை இசை முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தோல் பறை தொலைந்து போனது:
நம் பாரம்பரிய தோல் பறையானது சில மனிதர்களால் மாற்றப்பட்டு வைப்பர் பறை இன்று இசைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நம் தோல் பறையானது அழிவின் விளிம்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பாரம்பரிய தோல் பறையை இசைக்காமல் வைப்பர் என்ற பெயரில் வேறு பறையை இசைப்பது தோல் பறையை தொலைப்பதற்கு சமமாகும். காலப்போக்கில் தோல் பறை தொலைந்து போகும் அபாயமும் இருக்கிறது.
மார்கழியில் மக்களிசை:
நமது பறை இசையை பழங்காலமாக கோயில்களுக்கு வெளியேயும், அரசியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இறப்பு வீடுகள், பொங்கல் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு ஒரு மேடை அங்கீகாரம் என்பது கிடைக்கப்படாமல் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் அந்த கலையை வளர்க்க வேண்டும்! மேடை ஏற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் 'நீலம் கலை பண்பாட்டு மையம்' மார்கழியில் மக்கள் இசை என்ற ஒரு கலை நிகழ்ச்சி மூலம் மார்கழி மாதம் முழுவதுமாக பறையாட்டம், ஒப்பாரி, நையாண்டி மேளம் போன்ற கிராமிய கலைகள் அனைத்தையும் மேடை ஏற்றப்பட்டு அந்த கிராமிய கலைஞர்களை அங்கீகாரம் செய்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பறை இசைக்கும், பறை இசை கலைஞர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் கலைக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கச் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
வீதி விருது விழா:
இதே போல் சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, வருடந்தோறும் கிராமிய கலைஞர்களுக்கு வீதி விருது விழா நடத்தி, பறை இசையும் பறை இசை கலைஞர்களும் மேடையற்றப்பட்டு விருது கொடுக்கிறது என்பது மகிழ்ச்சி.
இது பறை இசைக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகும். அதேபோல் இந்தப் பறை இசையை கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்கிறது. இதன் மூலம் பறை இசை கலைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் ஒரு போதுமான வருவாயும் கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நமது பாரம்பரிய இசையான இந்த பறை இசையை நாம் இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பறை இசையின் மீதுள்ள சாதிய பாகுபாடுகளை பற்றி மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பறை இசை கலைஞர்களுக்கு அங்கீகாரம் கொடுப்போம்.
நாம் இறந்தவுடன் இந்த உடல் மண்ணிற்கும் நெருப்பிற்கும் இரையாகிறது. ஆனால் இறந்த மாட்டுத் தோலானது உயிர் பெற்று ஒரு இசை கருவியாக உருமாறுகிறது. இப்படி பயனுள்ள இசை கருவி பயன்படுத்துவதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமே தவிர இந்த பறை இசையை தீட்டு என்று கூறி வெறுப்புணர்வை ஏற்படுத்தாமல் இருப்பது சிறந்தது. உடல் மண்ணுக்கானது பறை இசை மக்களுக்கானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.