

மழை, பனி, குளிர் காலத்துக்கு ஏற்ற வித்தியாசமான ருசியான உடலுக்கு ஆரோக்கியமான ரசங்கள். சளி இருமலுக்கு ஏற்ற இந்த வித்தியாச ரசங்களை சாப்பிட குணமாகும்.
1. மிளகு ரசம்:
தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சம் பழம் அளவு
தண்ணீர் - 2 கப்
உப்பு -தேவைக்கு
வெல்லம் - சிறிது
தாளிக்க - கடுகு, பெருங்காயம், உரித்த பூண்டு 10 பற்கள், கறிவேப்பிலை.
பொடிக்க:
தனியா -1 1/2ஸ்பூன்
சீரகம் - 1/2டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மிளகு - 1/2டீஸ்பூன் கருவேப்பிலை - சிறிது
பூண்டு - 2 பல்
தனியா, மிளகு, சீரகம் மிளகாய் இடித்த பின் பூண்டு கருவேப்பிலை சேர்த்து கரகரப்பாக உரலில் இடிக்கவும்.
செய்முறை:
உரித்த பூண்டு பற்களை தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பூண்டு வெந்த பின் புளிக் கரைசல், உப்பு, வெல்லம் சேர்க்கவும்.
கொதி வரும் போது இடித்த பொடியை போட்டு மறு கொதிவந்த உடனே தாளித்து கொட்டி இறக்கவும். ருசியான ஆரோக்கியமான மிளகு ரசம் ரெடி. சூடான சாதத்தில் நெய் போட்டு பிசைந்து சாப்பிட சளி இருமல் குறையும்.
2. எலுமிச்சை ரசம்:
தேவையான பொருட்கள்:
வேகவைத்த துவரம் பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - சிறிது
கிள்ளிய சிவப்பு மிளகாய் - 2
கரகரப்பாக பொடித்த மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிது
எலுமிச்சம் பழம் - 2
பெருங்காயத்தூள் சிறிது
கடுகு - சிறிது தாளிக்க.
செய்முறை:
வெந்த பருப்போடு எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும். அடுப்பை அணைத்து விட்டு தாளித்துக் கொட்டி எலுமிச்சம்பழம் சாறு பிழியவும். விட்டமின் சி நிறைந்த ஆரோக்கியமான எலுமிச்சை ரசம் ரெடி. இதை சூடாக அருந்தலாம்.
சாதத்துடன் போட்டு கலந்து சாப்பிடலாம். குடிக்கும்போது வடிகட்டி கொத்தமல்லி கருவேப்பிலை நீக்கியும் குடிக்கலாம். இந்த ரசத்தை சூடு செய்யக்கூடாது.
திருப்பி சூடு செய்தால் வைட்டமின் சி சத்து குறைந்துவிடும்.
3. கொள்ளு ரசம்:
தேவையான பொருட்கள்:
கொள்ளு வறுத்தது - 1 கப்
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - ஐந்து பல்
தக்காளி - 1
மிளகு சீரகம் - 2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு, மஞ்சள் தூள் -சிறிது
எண்ணெய் - தேவைக்கு
கருவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு.
கடுகு - சிறிது
செய்முறை:
வறுத்த கொள்ளை குக்கரில் நன்றாக வேக வைக்கவும். தண்ணீரில் உப்பு, புளி, நறுக்கிய தக்காளி, நசுக்கிய பூண்டு கரைத்து ஒரு கொதி வந்தவுடன் அதனுடன் இடித்த மிளகு, சீரகம் போடவும்.
அதில் வேகவைத்த கொள்ளு நீரை ஊற்றி வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் போட்டு கருவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.
அதில், கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு மூடி வைக்கவும். எதிர்ப்பு சக்தி நிறைந்த கொள்ளு ரசம் ரெடி.
ரசம் கெட்டியாக இருக்க வேண்டுமென்றால் வெந்த கொள்ளை மிக்ஸியில் அரைத்தும் ஊற்றலாம். இது சளி, இருமல், தலைபாரம் சரியாக்கும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். சூடாக குடிக்க நன்றாக இருக்கும்.
இதனை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி தரும்.