

1. சிவப்பரிசி காரப் பணியாரம்
தேவையான பொருட்கள்:
சிவப்பரிசி - ஒரு கப்,
இட்லி அரிசி - ஒரு கப்,
கறுப்பு உளுந்து - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்),
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,
இஞ்சி (துருவியது) - ஒரு டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சிவப்பரிசி, இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை எட்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து, உப்பு கலந்து ஐந்து மணி நேரம் புளிக்கவிட்டு எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிதம் செய்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சித்துருவல் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலக்கவும். குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி எடுத்தால், ருசியான சிவப்பரிசி காரப் பணியாரம் ரெடி.
2. சிவப்பரிசி பாயாசம்
தேவையான பொருட்கள்:
சிவப்பு அரிசி - ½ கப்
தேங்காய் பால் - 1 கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - சுவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் சிவப்பரிசியை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
ஊறவைத்த அரிசியை 3 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விடவேண்டும். பின்னர் ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும்.
வாணலில் நெய் விட்டு சூடானதும், அரைத்தவற்றை சேர்த்து, தேங்காய் பால் ஊற்றி, நட்ஸ் பவுடர், ஏலப்பொடி, தேவையான சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
சுவையான, சத்தான சிவப்பரிசி பாயாசம் தயார்.
3. சிவப்பரிசி வடாம்
தேவையான பொருட்கள்:
சிவப்பு புழுங்கல் அரிசி - ஒரு கப்,
ஜவ்வரிசி - அரை கப்,
பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
சீரகம் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சிவப்பு புழுங்கல் அரிசியைக் களைந்து 7 மணி நேரம் ஊறவைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். பாதி அரைபட்டதும், சீரகம், ஊறவைத்த ஜவ்வரிசி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் நீர் விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை சிறிது, சிறிதாக ஊற்றி கைவிடாமல் கிளறவும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். மாவு மேலே தெறித்து விழாமல் கவனமாக கிண்டி (தீயைக் குறைத்து வைக்கவும்) வெந்ததும் இறக்கவும். முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி, மாவைப் போட்டு, சுத்தமான துணி (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் விருப்பமான வடிவத்தில் பிழிந்து, வெயிலில் வைத்து, திருப்பிப் போட்டு 2, 3 நாட்கள் காயவிட்டு எடுக்கவும்.
இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ருசியானது மட்டுமின்றி, உடம்புக்கு வலு சேர்க்கும் வடாம் இது.
4. சிவப்பரிசி அதிரசம்
தேவையான பொருட்கள்:
சிவப்பரிசி - ஒரு கப்,
துருவிய வெல்லம் - முக்கால் கப்,
சுக்கு, ஏலக்காய் - தலா கால் டீஸ்பூன் (பொடிக்கவும்),
நெய் - ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
வெள்ளை எள் - 2 சிட்டிகை.
செய்முறை:
சிவப்பரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு மணி நேரம் நிழலில் உலர்த்தி, அரைத்து, சலித்துவைத்துக் கொள்ளவும்.
பிறகு, துருவிய வெல்லத்தில் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி, கொதிக்க விடவும்.
இதில் பதம் மிகவும் முக்கியம். வெல்லப்பாகு உருட்டுப்பதம் வந்ததும், அதில் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் மற்றும் சலித்த மாவைக் கொட்டிக் கிளறி, நெய் விட்டு அடுப்பை உடனே அணைக்கவும்.
பிறகு ஒரு மணிநேரம் கழித்து அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, வாழையிலையில் எண்ணெய் தடவி அதில் தட்டி சூடான நல்லெண்ணெயில் பொரித்தெடுத்தால் அருமையான சிவப்பரிசி அதிரசம் தயார்.
சிவப்பரிசியைப் பயன்படுத்தி உடலுக்கு வலிமையையும் நாவிற்கு ருசியையும் தரும் 4 விதமான பாரம்பரிய உணவுகளை மிக எளிதாக வீட்டில் செய்யப் பழகிக் கொள்வீர்கள்.