

இன்றைய காலகட்டத்தில் பலரும் அடுத்தவர் வாழ்க்கையைத் தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து மனச்சோர்வு அடைகிறார்கள். இத்தகைய ஒப்பீடு மன அழுத்தத்தையும் தேவையில்லாத கவலைகளையும் வளர்க்கிறது. தேர்வு பயம் கொண்ட மாணவர்கள், இலக்குகளை நோக்கி ஓடும் இளைஞர்கள், குடும்பத்தைப் பராமரிக்கும் இல்லத்தரசிகள் என யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
சமூக வலைதளங்கள், மினுமினுக்கும் உலகத்தைக் காட்டலாம்; ஆனால் நிஜ வாழ்க்கையில் திரைமறைவுப் போராட்டங்களும் உண்டு. இவர்கள் அனைவருக்கும் தேவைப்படுவது ஒப்பீடு அல்ல, தன் வளர்ச்சிக்கான வழிமுறைகள் மட்டுமே.
மூங்கிலின் ரகசியம்:
ஒரு தோட்டத்தில் ரோஜாச் செடியும் மூங்கிலும் அருகருகே இருந்தன. ரோஜா சில வாரங்களிலேயே பூத்துக் குலுங்கியது. பார்ப்பவர்கள் எல்லோரும் ரோஜாப் பூக்களை ரசித்துப் பாராட்டினர். மூங்கிலோ ஓராண்டு கழிந்தும், இரண்டாண்டு கழிந்தும் தரைக்கு மேலே ஒரு துளிர்கூட காட்டவில்லை.
ஆனால் மண்ணுக்குள் அது தன் வேர்களை ஆழமாகவும் அகலமாகவும் பரப்பிக் கொண்டிருந்தது. ஐந்தாம் ஆண்டில் திடீரென வானை நோக்கி வளர்ந்து, சில வாரங்களிலேயே உயர்ந்து நின்றது. அப்போது ரோஜா வாடிப்போயிருந்தது.
மூங்கில் தன்னை ரோஜாவுடன் ஒப்பிட்டு மனம் தளர்ந்திருந்தால், தன் வளர்ச்சிக்கான நேரம் வரும் முன்பே சோர்ந்து போயிருக்கும். வெற்றி எப்போது கிடைக்கிறது என்பதைவிட, எவ்வளவு உறுதியாக நிற்கிறோம் என்பதே முக்கியம். நமக்கும் இதுவே பொருந்தும்.
காண்பது பாதிக் காட்சிதான்:
சமூக வலைதளப் பக்கங்களில் நாம் பார்க்கும் படங்களில் எல்லோரும் எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களின் கடன், கவலை, வாழ்க்கை சிக்கல்கள், நோய், தூக்கமில்லாத இரவுகள் அந்தப் படங்களில் தெரிவதில்லை. கைபேசியில் காணும் அடுத்தவரின் சிறந்த பக்கத்தை நம் முழு வாழ்க்கையோடு ஒப்பிடுவது நியாயமற்றது. மற்றவர்களின் போலியான புன்னகையைப் பார்த்து உண்மையென நம்பக் கூடாது.
ஒவ்வொருவர் பாதையும் வேறு:
ஒவ்வொருவரின் சூழலும், சுமையும், தொடக்கப் புள்ளியும் வேறுபட்டவை. சிலருக்கு ரோஜாவைப்போல விரைவில் வெற்றி கிடைக்கும்; சிலருக்கு மூங்கிலைப் போலத் தாமதமாக, ஆனால் உறுதியாக வெற்றி வசப்படும். ஒவ்வொரு விதைக்கும் முளைக்க ஒரு காலம் உண்டு; உங்களுக்கான காலமும் வரும்.
நமக்கு நாமேதான் போட்டி:
நமக்குப் போட்டி மற்றவர் அல்ல. நமக்கு நாமே தான் போட்டி. நேற்றைய நம்மைவிட இன்று சற்று மேம்பட்டிருக்கிறோமா என்பதே உண்மையான கேள்வி. புதிதாக ஒன்றைக் கற்றோமா, ஒரு தீய பழக்கத்தைக் குறைத்தோமா, யாருக்காவது உதவினோமா என்று சிந்தித்துப் பாருங்கள். சிறிய முன்னேற்றமும் முன்னேற்றமே. நேற்றைவிட இன்று ஒரு அடி முன்னே வைத்தால், அதுவே பெரிய வெற்றி.
மனதை அமைதிப்படுத்துங்கள்:
ஒப்பீட்டால் மனம் பதற்றமடையும்போது சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யலாம். தினமும் சில நிமிடங்கள் இதற்கு ஒதுக்குங்கள்; தேவையற்ற எண்ணங்கள் மெல்ல விலகும். அமைதியான நீரில்தான் படகு சீராகப் பயணிக்கும்; மன அமைதியில்தான் வாழ்க்கையின் நிம்மதியும் அடங்கியுள்ளது.
நன்றி சொல்லுங்கள்:
நமக்கிருக்கும் ஆரோக்கியம், குடும்பம், நட்பு, திறமை ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் இருப்பதைக் கண்டு ஏங்குபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம். குறைகளை எண்ணி வருந்துவதைவிட, நிறைகளை எண்ணி மகிழ்வதே நிம்மதிக்கான எளிய வழி.
பிறர் வெற்றியை வாழ்த்துங்கள்:
அடுத்தவர் வெற்றி நம் தோல்வி அல்ல. மனதார வாழ்த்தினால் பொறாமை என்ற சுமை இறங்கும். அவர்களிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் முடியும். பிறர் வெற்றிக்குத் தடையாக இல்லாமல், ஏணியாக இருங்கள்; அந்த நல்ல மனம் உங்களையும் உயர்த்தும்.
ஒப்பீடு மனதைச் சுருக்கும். முயற்சி மட்டுமே வானத்தைக் கூட வசப்படுத்தும். அடுத்தவர் வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவதைவிட, நம் வேர்களை ஆழமாக்குவதில் கவனம் செலுத்துவோம். நமக்கான வானம் காத்திருக்கிறது; நம் காலம் வரும்போது நாமும் உயர்ந்து நிற்போம்.
சமூக வலைதளங்களின் மாய உலகில் இருந்து வெளிவந்து, நம்மிடம் உள்ளதை எண்ணி மகிழ்ந்து, நமக்கான சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி மனநிம்மதியுடன் வாழ வழிகாட்டுகிறது.