

அந்தக் காலத்து வாழ்க்கை எல்லா வீடுகளிலேயும் கிழவனோ, கிழவியோ ரெண்டு பெரிசுகள் கிடப்பாங்க. நாங்கெல்லாம் அந்தக்காலத்துல என்று அவர்கள் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் ஏ அய்யா ஆள விடு தாத்தா வேலையிருக்கு... என்று ஓட்டம் பிடித்து விடுவோம். உண்மையிலேயே அந்தக் காலத்தில் நடந்த நிறைய விஷயங்களை தத்ரூபமாக அந்தக்கால பெரியவர்கள் சொல்வது போல் சொல்ல இப்போது பெரிசுகளே இல்லை.
அப்படிச் சொன்னாலும் அதைக்கேட்டு ரசிக்கும் நிலையில் சிறிசுகள் இல்லை புராணங்களோ, இதிகாசங்களோ, பட்டி விக்ரமாதித்யன் கதைகளோ பொண்டாட்டி புருஷன் வைப்பாட்டி சண்டைகளோ .. உள்ளூர் பேய்க் கதைகளோ… அவர்கள் கதை சொல்லும் விதமே அலாதியானது.
கட்டுச்சோறு கட்டிக்கிட்டு திருச்செந்தூருக்கும், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கும் பழனிக்கும் வாரக் கணக்கில் நடந்தே போனதெல்லாம் எங்க பாட்டி மாசக்கணக்கில் சொல்லுவாள்.
சினிமாத் தியேட்டர் டி வி இதெல்லாம் வராத அந்தக்காலத்துல வருஷத்துக்கு ரெண்டு திருவிழா, ஒரு தீபாவளி, ஒரு பொங்கல் பண்டிகைனு வில்லடி கரகாட்டம் பஃபூன் பேசிய இரட்டை அர்த்த ஆபாச வசனம் இவைகள்தான் காடு கரைகளில் பேசு பொருளாகிவிடும் .
இதை மட்டுமே 365 நாளும் பேசிப் பேசித்தீர்ப்பார்கள். இடை இடையே ஒன்றிரண்டு வெட்டுக்குத்து கொலை கொள்ளை எவளாவது ஓடிப்போன கதை அப்புறம் யாராவது பேயடிச்சு செத்துப்போன கதை இதெல்லாம் த்ரில்லர்கள் மாதிரி அப்பப்ப வந்து சுவாராஸ்யம் கூட்டும்.
அவர்களுக்கும் வேறு பொழுது போக்கு அம்சம் எதுவும் இல்லாததாலும் கால அவகாசம் நிறைய இருந்ததாலும் பொழுதை இப்படித்தான் கதை பேசியே ஓட்டியாக வேண்டும்.
இப்போது சில வினாடிகளில் வீடியோ கால் போட்டு, செல்போனில், வாட்ஸ் அப்பில்,சாட்டிங்கில் அமெரிக்கா ஆஸ்திரேலியா உலகின் எந்த மூலை யிலிருந்தாலும் பிள்ளைகளைப் பேரப் பிள்ளைகளை பார்த்தபடியே- நேரில் பேசி விடுகிறோம். சில மணி நேரங்களில் லக்க்ஷக்கணக்கான ரூபாய்களை கைமாற்றி விடுகிறோம். வேணும்கிற போதெல்லாம் ATM களில் பணமெடுத்துக் கொள்கிறோம். நிமிஷத்துக்கு நூறு தடவை வாட்ஸ் ஆப் பிலும் தகவல் பரிமாறிக் கொள்கிறோம்.
அந்தக் காலத்தில் பாளயங்கோட்டை காலேஜில் படித்த எனக்கு நீ எப்படி இருக்கிறாய் என்று அப்பா கழுகுமலை போஸ்ட்டாபீசில் எழுதிப் போட்ட ஒரு இன்லண்டு லெட்டர் வந்து சேர மூணு நாளாகும். நான் நல்லா இருக்கேன், ஒரு அம்பது ரூபா மணி ஆர்டர் பண்ணுப்பா என்று நான் எழுதிய போஸ்ட் கார்டு அவருக்குப் போய்ச் சேர மூணு நாளாகும். அதுக்குப்பிறகு அவர் அனுப்பிய மணி ஆர்டர் வந்து சேர நாலு நாளாகும்.
அப்படி இப்பிடி என்று ஒரு அம்பது ரூபா நம் கைக்கு வந்து சேர ஏழெட்டு நாட்களாகிவிடும். அப்பா ஒரு பிரபலமான நாதஸ்வரக் கலைஞர். அவருக்கென்று ஒரு தனி மேள செட் இருந்தது அதில் கூட வாசித்தவர்கள் இருபது வருடங்கள் வரை அவர் செட்டிலேயே இருந்தார்கள்.
கோயில் கொடை, திருவிழா, கல்யாணம், காது குத்து என்று மாதத்தில் பாதி நாட்கள் அவருக்கு ப்ரோக்கிராம் இருந்துகொண்டே இருக்கும். அதுக்கெல்லாம் ஒரு மாசம் ரெண்டு மாசத்துக்கு முன்பேயும் பதிவாக கோவில் ஆஸ்தான விதிவான்கள் இருப்பதுபோல சில ஊர்களுக்கு ஒரு வருஷத்துக்கு முன்பாகவும் அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிவிடுவார்கள்.
பெரும்பாலும் நேரிலும் கடிதத்திலுமே மேட்டர் முடிந்து விடும். அவ்வளவு கால அவகாசம் இருந்தால்தான் பக்க நாயனம், தவில் வித்வான்களுக்கு, தகவல் சொல்லித் தயார் செய்ய முடியும்.
திடீரென்று ஒரு ப்ரோக்ரா மென்றால், உடன் வாசிப்பவர் களுக்குத் தகவல் சொல்வதற்கு உதவியாளர்தான் ஊர் ஊராக சைக்கிளிலும் பஸ்சிலும் சமயத்தில் கால் நடையாகவும் இந்தக் கலைஞர்களுக்கு தாக்கல் சொல்ல நேரில் போயாக வேண்டும். ஒத்து ஊதுறவர்தான் இந்த வேலையையும் பார்த்துக்கிடுவார்.
அன்று போஸ்டாபீசிலிருந்து ஒரு ED பேக்கர், வந்திருந்தார். இவர் போஸ்ட் மேன் அல்ல. அவருக்கும் கீழே பணியாற்றும் ED BAGGER. தந்தி கொண்டு போவது, தபால் பைகளைச் சுமந்து கொண்டு போய் பஸ்களில், ரெயில்வே ஸ்டேஷன் இருக்கும் ஊர்களில் ரெயிலில் MAIL ஏற்றி விடுவது, வரும் தபால்களை சுமந்து வருவது ட்ரங்கால் வந்தால் தகவல் சொல்வது போன்ற வேலைகளை பாவம் நாலணாவுக்கும், எட்டணாவுக்கும் செய்து வருஷக் கணக்கில் அல்லல் பட்டுக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.
இவர்கள்தான் காலை எட்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.
விருதுநகருலேருந்து ஓரு பிபி கால் வந்திருக்கு ஒம்பது மணிக்குள்ள போஸ்ட்டாபீஸ் வந்திருங்க வாத்தியாரே என்பார். ஒரு பேப்பரில் கையெழுத்தும் வழக்கம்போல டீ குடிக்க ஒரு நாலணாவையும் சைக்கிள் வாடகையையும் வாங்கிக்கொண்டு பறந்துருவார்.
இந்த இடத்தில் பிபி கால் என்றால் என்னவென்று ஒரு சின்ன விளக்கம். அப்போதெல்லாம் எல்லா ஊர்களுக்கும் டெலிபோன் வசதி வரவில்லை. ஒரு நாலஞ்சு சின்னச் சின்ன கிராமங்களுக்கு சேர்த்து ஒரு பெரிய கிராமத்தில் ஒரு பிராஞ்சு போஸ்ட்டாபீஸ் இருக்கும். அந்த பிராஞ்சு போஸ்ட்டாபீசுகளுக்கெல்லாம் சேர்த்து பக்கத்து டவுனில் செயல்படும் ஒரு சப் போஸ்ட்டாபீஸில்தான் தந்தி வசதியும் டெலிபோன் வசதியும் இருக்கும்.
அங்கிருந்து தபால்கள் மட்டும்தான் பிராஞ்ச் போஸ்ட்டாபீசுக்கு வரும். மற்றபடி தந்தியும் ட்ரங்காலும் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கே இந்த ED பேக்கர்கள் மூலம் அனுப்பப்பட்டுவிடும். கோவில்பட்டி சங்கரன்கோவில் போன்ற பெரிய தாலுகா ஊர்களில்தான் ஹெட்போஸ்ட் ஆபீஸ் டெலிபோன் எக்சேஞ்சு வசதி எல்லாம்இருக்கும்.
அன்றும் அப்படித்தான் விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு கச்சேரியை புக் பண்ணி அட்வான்ஸ் கொடுக்க கோயில் தர்மகர்த்தா விருதுநகரிலிருந்து ட்ரங்கால் போட்டிருக்கார். அவர் விருதுநகர் போஸ்டா பீஸில் போய் particular person க்கு போன் போட்டு பேசணுமென்று தகவல் தருவார்.
அங்கிருந்து விலாசதாரருக்கு அருகிலிருக்கும் ஊரிலுள்ள sub post office க்கு போன் போகும். அங்கிருந்து ஈ டி பேக்கர் போய் பேச அழைக்கப்படும் particular person க்கு தகவல் தந்து அழைத்து வருவதையே சுருக்கமாக பி பி கால் என்பார்கள்
இப்பவே மணி எட்டு தாண்டிருச்சே எலே சைக்கிளத் துடச்சியா என்றார் அப்பா ...?
கெதக்கன்றது மனசு. நேத்து சைக்கிள முள்ளுக்குள்ள விட்டு பஞ்சராக்குனது மறந்து போச்சு. சரி நல்லா வசவு வாங்கப் போறேன்.
அப்பா சைக்கிள் பஞ்சராகிக் கிடக்கு என்றேன் ஈனஸ்வரத்தில்.
சைக்கிள பஞ்சராக்கிட்டியா ? வெளங்கிரும். சரி எட்டர மணி பஸ்சை யாவது பிடிக்கமுடியுமா பாருடீ என்றார் அப்பா அம்மாவிடம்.
எல்லாரும் அசந்திருந்த வேளையில் எட்டுமணி பஸ் ஒம்பது மணி சுமாருக்கு ஆடி அசைந்து வந்தும் கூட வேகு வேகு என்று மூச்சிரைக்க ஓடி விரட்டித்தான் பஸ்ஸை பிடித்தோம்.
என்னைத் திட்டக்கூட நேரமில்லாமல் ஓடிவந்த அப்பா பஸ் ஏறும்போது சரி நீயும் வாரயால என்றார். இது இது இதுக்குத்தானே ஆசைப்பட்டேன்.
வேண்டா வெறுப்பாக ஏறுவதுபோல் அவர் பின்னாடியே ஏறிக்கொண்டேன். அவர் கூடப் போனால் கழுகுமலையில் தேவர் ஹோட்டலில் புரோட்டா சால்னா மொச்சைப்பயறு பூரிக்கிழங்கு கார வட மாம்பழ சீசனா இருந்தால் கிளிமூக்கு மாம்பழம் பலாப்பழ சீசனா இருந்தால் பலாச்சுளைகள் கரடி சேவுக்கடையில் மொறுமொறுவென்ற பக்கடா பட்டரச்சேவு இப்படி எதாவது தின்னக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
ஒரு ஒம்பதரை மணிக்கு நாங்கள் போஸ்ட்டாபீஸ் வந்து விட்டோம். பத்துமணிக்கு PP வந்துவிட்டார் என்று விருதுநகர் போஸ்டாபீசுக்கு போன் போட்டு சொல்லி அந்த போஸ்டாபீசி லிருந்து அப்பாவை அழைத்தவருக்கு தாக்கல் அனுப்பி விருதுநகர் போஸ்டா பீசிஸுக்கு வந்து அப்பாவிடம் அவர் பேசும்போது மணி பத்தேகால்.
போன் பேசி முடித்துவிட்டு அப்பாவும் நானும் வெளியில் வரும்போது மணி பத்தரை. அடுத்து எங்களுக்கு 12 மணிக்குத்தான் பஸ். 12 மணி பஸ் 1 மணிக்குத்தான் கிளம்பும். ஊரை விட்டு வெளியில் வந்து அடுத்த ஸ்டேஜ் வருவதற்கு முன்பு ஏதாவதொரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி கண்டக்டர் டிக்கட் புக்கைப் பார்த்து வாசிக்க வாசிக்க டிரைவர் இன்வாய்ஸ் எழுதுவார்.
அப்புறம் அது கிளம்பி அஞ்சாறு ஸ்டாப்பிங்கில் ஆள் ஏத்தி இறக்கி விட்டு ஊர் போய் சேரும்போது ஒன்றரை மணி ஆகிவிடும். அதாவது ஒரு மூணு நிமிஷ ஃபோன் கால் பேசுவதற்கு இரண்டு பஸ்கள் இரண்டு போஸ்டாபீஸ்கள் இரண்டு டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகள் ரெண்டு கிளார்க்குகள் இரண்டு ED பேக்கர்கள் நாலஞ்சு எடுபிடிகள் ஒருங்கிணைந்து சுமாராக ஒரு இருபது ரூபாயும் செலவு செய்து காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த ஆபரேசன் ரெண்டு மணிக்கு நிறைவுற்றதை நினைக்கையில் மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது. காலம்தான் எம்புட்டு மாறிப்போச்சு.