
ஆத்மநாதன் மிகவும் புத்திசாலி. பட்டம் பெற்றுவிட்டார். இனி வேலை தேட வேண்டும். அவருக்கு ராணுவத்தில் சேரவே விருப்பம், ஆசை, லட்சியம் எல்லாம்.
சொந்த ஊர் தஞ்சாவூர். பட்டம் பெற்ற 6 மாதங்களில் ராணுவ ஆபிசர் வேலைக்கு விளம்பரம் வந்தது. எந்தவிதச் சிந்தனையும் இன்றி விண்ணப்பித்தார். விண்ணப்பித்துவிட்டு சும்மா இருக்கவில்லை. தேர்விற்குப் பயிற்சி செய்தார். நாட்டு நடப்பை நன்கு தெரிந்துகொண்டார். மேலும், தினமும் கஷ்டப்பட்டு படித்தார். அவருக்கு ராணுவத்தில் சேர விருப்பம் மட்டும் அல்ல; ஒரு விதமான வெறியும் இருந்தது. அவர் வேறு வேலை பற்றி யோசிக்கக்கூட இல்லை.
தேர்வு நாள்: ஆத்மநாதன் நம்பிக்கையுடன் தேர்வு எழுதினார். பதட்டம் இன்றி நிதானமாக எழுதினார். சும்மா சொல்லக்கூடாது. திறம்பட தேர்வு எழுதினார்.
அடுத்த மாதம் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. 'நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள். அடுத்த மாதம் 1ம் தேதி பெங்களூருவில் உங்களுக்கு நேர்காணல் உள்ளது. வாழ்த்துக்கள்.' என்று எழுதி இருந்தது.
ஆத்மநாதன் முதல்படி தாண்டி விட்டார். இனி நேர்காணல்தான். ஆத்மநாதன் அதற்கும் பயிற்சி செய்தார். தினமும் பத்திரிகை படித்து வந்தார்.
தேதி 1. நேர்காணல். ராணுவ அதிகாரிகள் ஆத்மநாதனை உட்கார வைத்து நேர்காணல் ஆரம்பித்தார்கள்.
ஆத்மநாதன் பட்.. பட்.. என்று பதில் சொன்னார்.
ராணுவ அதிகாரி ஒருவர் உங்களுக்கு பிடித்த சுதந்திரப் போராட்ட வீரர் யார்..? என்று கேட்டார்.
“சார்.. சுபாஷ் சந்திர போஸ்…!”.என்றார்.
நேர்காணல் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. நேர்காணல் முடிந்ததும் அதிகாரிகள் அப்போதே முடிவைச் சொன்னார்கள். ஆத்மநாதன் நேர்காணலில் தேர்ச்சி பெற்றார் என்று அறிவித்தனர். ஆத்மநாதன் படு குஷி ஆனார். ஆம் அடுத்தபடியையும் தாண்டி விட்டார்.
அதிகாரிகள், 'அடுத்த வாரம் பெங்களூரு ஸ்டேடியத்தில் செயல்முறை தேர்வும், உடல் பரிசோதனையும் இருக்கிறது. அதில் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு வேலை நியமன உத்தரவு கொடுக்கப்படும். ஆல் தி பெஸ்ட்…!' என்று அதிகாரிகள் ஆத்மநாதனை அனுப்பி வைத்தார்கள்.
செயல் முறை தேர்வு. முதலில் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் 12 நொடிக்குள் வர வேண்டும். ஆத்மநாதன் 12 நொடிகளில் வந்துவிட்டார். பிறகு நீளம் தாண்டுதல். அதிலும் மிக அருமையாகத் தாண்டி முதல் இடம் பிடித்தார். பிறகு உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், எல்லாம் நடந்தது. ஆம், ஆத்மநாதன் தேர்ச்சி அடைந்து விட்டார்.
எல்லா தேர்விலும் நன்றாக செயல்பட்டு வெற்றி வாகை சூட்டினார். ஆம், கிட்டத்தட்ட அவருக்கு வேலை உத்திரவாதம் ஆகியது. கடைசியில் உடல் ஆரோக்கியம் பற்றி பரிசோதனை ராணுவ டாக்டர்கள் செய்தனர். ஆத்மநாதனுக்கு எந்த நோயும் இல்லை என்று ஊர்ஜிதம் ஆனது. பிறகு அவர் உடலை பரிசோதனை செய்தார்கள்.
வந்தது வினை. ஆத்மநாதன் இடது காலில் வெரிகோஸ் வெயின்ஸ் இருந்தது. அதாவது நரம்பு முடிச்சு.
"இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யவில்லையா… ?" டாக்டர் கேட்டார். “தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள் 35 வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள். ராணுவத்தில் இந்த நரம்பு முடிச்சு உள்ளவர்களுக்குப் பணி இல்லை.”
“டாக்டர்... நான் இப்போதே அறுவை சிகிச்சை செய்துகொள்கிறேன்…!“ என்று அழாதகுறையாக கேட்டார்.
“சாரி… மிஸ்டர் ஆத்மநாதன்... எனக்கு உங்கள் வலி புரிகிறது. எல்லாவற்றையும் முடித்தும் நீங்கள் தேர்வு ஆகவில்லை என்பது பெரிய மனவருத்தம் தரும். ஆல் தி பெஸ்ட்!”
ஆத்மநாதன் மிகவும் நொந்தார். கைக்கு எட்டியும் வாய்க்கு கிடைக்க வில்லையே என்று மனம் விட்டு அழுதார்.
பாவம்… ஆத்மநாதன்... ராணுவ விதிகள் தெரியாததால்...
வெரிகோஸுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு ராணுவ வேலை செய்ய தயாரானார்.