சிறுகதை: சொச்சம்..!

சுயமரியாதைக்கும் குடும்ப பாசத்திற்கும் இடையேயான மெல்லிய கோட்டை விளக்கும் சிறுகதை
சிறுகதை | A man with phone
சிறுகதை | A man with phoneImage credit: Chatgpt
ஜி. ரமேஷ்

ரமேஷ்ஜி டெக்ஸ்டைல் துறையில் பரவலாக அறியப்படும் நிபுணர். உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகிய இரு துறைகளிலும் இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை பெற்றுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம், லாண்ட்மார்க், அரவிந்த் பேஷன்ஸ், அம்பத்தூர் clothing போன்ற முன்னணி நிறுவனங்களில் பணி. தனது அறிவையும் அனுபவத்தையும் தனது எழுத்து, பேச்சு,பயிற்சி மற்றும் கல்வி மூலமாக பகிர்ந்து ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

இரவு மணி பத்தரை. ஹால் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

சுவரில் சாய்ந்தபடி மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அசோக்.

டைப்பிங் சத்தம் மட்டுமே அந்த அறையின் அமைதியைக் கலைத்துக் கொண்டிருந்தது. கோபத்தின் உஷ்ணம் அவன் முகத்தில் இன்னமும் தணியாமல் அப்படியே இருந்தது. சமையலறையிலிருந்து ஜில்லென்ற மோருடன் வந்த மீனா, அதில் லேசாகப் பெருங்காயமும் கொத்தமல்லியும் தூவி, அதை அவனருகே இருந்த சிறிய மேஜை மீது வைத்தாள்.

"இந்தச் சூட்டுக்கு இந்த மோர் உடம்புக்கும் மனசுக்கும் நல்லது, குடிங்க..." என்றபடி சற்றே தள்ளி அமர்ந்தாள்.

அவள் எதையோ எதிர்பார்க்கிறாள் என்பது அசோக்கிற்குப் புரிந்தது. ஆனால், அவன் பார்வையைத் திரையிலிருந்து திருப்பவில்லை.

"இன்னும் வேலை முடியலையா?" – அமைதியைக் கலைத்தாள் மீனா.

"ம்... இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு." – அசோக்கின் குரலில் ஒரு சுமை.

"இன்னைக்குச் சாயங்காலம் அம்மா போன் பண்ணியிருந்தாங்க..."

அசோக்கின் விரல்கள் விசைப்பலகையில் கணநேரம் நின்றன. பிறகு மீண்டும் தொடர்ந்தன.

"ஓ... என்ன சொன்னாங்க?"

"போன வாரம் விசேஷத்துல அவங்க பேசினது உங்களுக்குக் கோபத்தைக் கொடுத்திருக்கும்னு அவங்களுக்குப் புரியுதாம். ‘அவன் சுபாவம் எனக்குத் தெரியாதா... கொஞ்சம் காரமாப் பேசிட்டேன், அவனைப் போன் பண்ணச் சொல்’னு சொன்னாங்க"

அசோக் மடிக்கணினியை அரைவாசி மூடிவிட்டு மீனாவைப் பார்த்தான்.

அவனது கண்கள் லேசாகச் சிவந்திருந்தன.

"மீனா, உன்னோட அத்தை அன்னைக்குக் குடும்பத்துப் பெரியவங்க முன்னாடி பேசினது காரமானப் பேச்சு மட்டும் இல்லை. என் சுயமரியாதையைத் தொட்டப் பேச்சு. என் உழைப்பையும் அனுபவத்தையும் மட்டம்தட்டிப் பேசின அப்புறமும், நான்தான் இறங்கிப்போய் போன் பண்ணணுமா? பெத்த அம்மாவா இருந்தாலும் எனக்குன்னு ஒரு சுயமரியாதை கிடையாதா?"

சிறுகதை | Husband and wife
சிறுகதை | Husband and wife Image credit: Chatgpt

அவன் குரலில் இருந்த உஷ்ணத்தைக் கண்டு மீனா பதறவில்லை. மோர்க் கிளாஸை லேசாக நகர்த்தி வைத்தாள்.

"சுயமரியாதை முக்கியம்தான் அசோக். அதை யாரும் இறக்கி வைக்கச் சொல்லல. அன்னைக்கு அம்மா பேசினது தப்புதான், அதை நான் அன்னைக்கே அவங்ககிட்டயும் சொல்லிட்டேன். ஆனா...?"

"ஆனா என்ன மீனா? ஒவ்வொரு தடவையும் 'அம்மாங்கிற ஒரே காரணத்துக்காக நான்தான் விட்டுக் கொடுக்கணுமா? என் சுயமரியாதையோட உச்சத்தை நான் விட்டுத்தந்தா, அப்புறம் எனக்குன்னு என்ன மிஞ்சும்?"

மீனா அவனை நிதானமாகப் பார்த்தாள். குரலில் எந்த அழுத்தமும் இல்லாமல் லேசாகப் புன்னகைத்தாள்.

"சுயமரியாதையோட உச்சத்தைப் பிடிச்சுக்கிட்டே இருந்தா, பெத்தவங்ககிட்டயும் சரி, கூட இருக்கிறவங்ககிட்டயும் சரி... கடைசியில இடைவெளி மட்டும்தான் மிஞ்சும் அசோக். வெளிஉலகத்துல நம்ம சுயமரியாதை நூறு சதவீதமும் உச்சத்தில்தான் இருக்கணும். அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நீரின்றி அமையாது வாழ்வு!
சிறுகதை | A man with phone

ஆனா, பெத்தவங்ககிட்டயும், நாம நேசிக்கிற சொந்தங்களுக்குள்ளேயும் வரும்போது... அந்தச் சுயமரியாதையில 'சொச்சம்' விட்டுக்கொடுக்கப்படணும்."

அசோக் அமைதியானான்.

"அப்படி விட்டுக்கொடுக்கிற அந்தச் சொச்சம்தான்... இந்த வீட்டோட கூரையை விழாமத் தாங்கிப்பிடிச்சுக்கிட்டு இருக்கு!" சொல்லிவிட்டு மீனா எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள்.

அசோக் அந்த மோர்க் கிளாஸைப் பார்த்தான். உள்ளே இருந்த குளுமை அவனுள் இறங்குவதுபோல இருந்தது. 'கூரை விழாமல் தாங்கிப் பிடிக்கும் சொச்சம்' என்ற வார்த்தை அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அவனுக்குத் திடீரென்று ஒன்று புரிந்தது. கடந்த பத்து வருடங்களில், கோபங்களுக்கும் பிடிவாதங்களுக்கும் இடையே, மீனா தன் சுயமரியாதையின் எத்தனை 'சொச்சங்களை' அமைதியாக விட்டுக் கொடுத்திருப்பாள்? அவள் விட்டுக்கொடுத்த அந்தச் சொச்சங்கள்தான் இன்றைக்கு இந்த அழகான குடும்பமாக நிமிர்ந்து நிற்கிறதா?

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தேனடை!
சிறுகதை | A man with phone

பெத்த தாயிடம் தன் சுயமரியாதையின் உச்சத்தைக் காட்டுவது பெருமையல்ல என்பதை அவன் உணர்ந்தான். அவன் கை மெதுவாகத் தன் கைப்பேசியை நோக்கிய நகர்ந்தது.

அம்மாவின் எண்ணை அழுத்துவதற்கு முன், அவனது சுயமரியாதையின் உச்சம் லேசாகக் கீழே இறங்கியிருந்தது... அன்பின் பொருட்டு!