சிறுகதை: மகாத்மாவிடமிருந்து பெற்ற ஞானோதயம்!

லே-லடாக் பயணத்தில் சியாச்சின் வீரரை சந்தித்த பன்னாட்டு நிறுவன மேலாளரின் சிந்தனையை மாற்றிய உத்வேகக் சிறுகதை.
சிறுகதை | Driver and Ravi
சிறுகதை | Driver and Ravi AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

லே-லடாக்கைச் சுற்றிப்பார்க்க, டெல்லியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் ரவி தனது குடும்பத்துடன் ஒரு வார விடுமுறையில் வந்திருந்தான். ஆடம்பரமான பங்களா, இரண்டு பெரிய கார்கள் என சொகுசாக வாழ்பவன் ரவி. மனைவி மற்றும் குழத்தைகளோ கேட்கவே வேண்டாம். தேவையில்லாவிட்டாலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். ரவி ஏதாவது அறிவுரை கூறினால்கூட, இந்தக் காதில் வாங்கி அந்தக் காது வழியே வெளியில் விடும் ரகம்.

லே-லடாக் சுற்றுப் பயணத்தின்போது, ரவிக்கு நியமிக்கப்பட்ட ஓட்டுநர், சுமார் 30 வயதுடைய மகாத்மா என்கிற ஓர் இளைஞர். சுற்றுலாப் பயணிகளை மிகவும் பாதுகாப்பாகக் கூட்டிச்செல்பவர் மகாத்மா. பயணத்தின்போது, பயணிகள் கேட்டால் மட்டுமே, சுவாரசியமான பல விஷயங்ளைப் பகிர்வது உண்டு. அநாவசியமாக பேசமாட்டார். சிரித்த முகத்துடன் வண்டியை ஓட்டுபவர். சுற்றுலாப் பயணத்தின் கடைசி நாளன்று ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு தங்கியிருந்த இடத்திற்குத் திரும்புகையில்,

"இந்த வாரத்துடன் சுற்றுலாப் பருவம் முடிந்துவிடும். கடும் குளிர் ஆரம்பமாகிவிடும். அதன்பிறகு என்ன செய்வீர்கள்? வேறு ஏதாவது வேலை பார்க்க பெரிய நகரத்திற்குச் செல்வீர்களா?" என்று ரவி, மகாத்மாவிடம் எதேச்சையாக கேட்க,

"இல்லை, நான் லடாக்கிலேயே தங்குவேன். சியாச்சினுக்குச் செல்வேன்."

"சியாச்சினுக்கா? இங்கிருப்பதைவிட அங்கே மிகவும் குளிராக இருக்குமே!"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: லாட்டரி அடிச்சுடுச்சு… ஆனா…?
சிறுகதை | Driver and Ravi

"நான் அங்கே இந்திய ராணுவத்திற்குச் சுமைதூக்குபவராக வேலை செய்கிறேன். அது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான வேலை."

"அப்படியென்றால்...?"

"எங்களில் சிலர் இங்கிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரம் நடந்து சியாச்சின் அடிவார முகாமை அடைவோம். அதற்கு சுமார் 15 நாட்கள் ஆகும். அங்கே மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும். எல்லாம் சரியாக இருந்தால், எங்களுக்குச் சீருடைகள், பூட்ஸ், குளிரைத் தாங்கும் ஆடைகள் மற்றும் தலைக்கவசங்கள் வழங்கப்படும். அதன்பிறகு, நாங்கள் அங்கே சுமார் மூன்று மாதங்கள் தங்கி வேலை செய்வோம்."

"நீங்கள் அங்கே என்ன மாதிரியான வேலை செய்கிறீர்கள்?"

"சுமைகளைச் சுமந்துசெல்வோம். இராணுவத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் விமானங்களிலிருந்து கீழே போடப்படுகின்றன. அவைகளை எங்கள் முதுகில் சுமந்துகொண்டு ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு எடுத்துச் செல்வோம். பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ள அப்பகுதிக்கு லாரிகள் செல்லமுடியாது. பனி ஸ்கூட்டர்கள் அதிக சத்தம் எழுப்பும், அது எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டை ஈர்க்கும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அப்பா வந்திருந்தார்!
சிறுகதை | Driver and Ravi

எனவே, நாங்கள் அதிகாலை 2 மணியளவில் எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம். கைவிளக்குகளைப் பயன்படுத்தக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை. நாங்கள் முழுமையான அமைதியிலும் இருளிலும் நடக்கவேண்டும். அங்கு குதிரைகளோ கழுதைகளோ கிடையாது. 18,000 அடி உயரத்தில், மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிரில் எந்த விலங்காலும் உயிர்வாழ முடியாது."

ரவிக்கு வியப்பாக மட்டுமல்ல, ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டான். மேலும் பேச்சுக் கொடுத்தான்.

"அங்கே ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்குமே! இவ்வளவு கனமானச் சுமைகளை எப்படிச் சுமக்கிறீர்கள்?"

"எடை அதிகபட்சம் 15 கிலோகிராம் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், நாங்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வோம். மீதி நேரம் முழுவதும் உயிரோடு இருப்பதற்கான போராட்டம்தான்."

"அது ஆபத்து நிறைந்த வாழ்க்கை இல்லையா?"

சற்றே மௌனம் காத்த மகாத்மா, "என் நண்பர்கள் பலர் திரும்பி வரவே இல்லை. சிலர் பனிப் பொந்துகளில் விழுந்தனர்; சிலர் எதிரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். மிகப்பெரிய ஆபத்து பனிக்கரடியாகும். அது கடித்தால், அங்கேயே மரணம்தான்."

சிறுகதை | Driver and Ravi
சிறுகதை | Driver and Ravi AI Image

"உங்களுக்கு சம்பளம் எவ்வளவு என்று சொல்லமுடியுமா?"

"சம்பளம் மாதம் ரூபாய் 20,000. ராணுவம், மற்ற அனைத்து செலவுகளையும் பார்த்துக்கொள்கிறது. எனவே, மூன்று மாதங்களில், என்னால் ரூபாய் 60,000 வரை சேமிக்கமுடியும். அதைக்கொண்டு என் குடும்பம் நன்றாகப் பிழைக்கிறது. அதையும்விட முக்கியமாக, என் நாட்டிற்கும், ராணுவத்திற்கும் என்னால் முடிந்த சிறு வேலையைச் செய்கிறேன் என்கிற மனநிறைவு கிடைக்கிறது."

ரவிக்கும், கேட்டுக்கொண்டி.ருந்த அவனது குடும்பத்திற்கும் பேச்சு வரவில்லை. ஏ.சி. அறையில், அமர்ந்து, ஆண்டுக்கு ரூபாய் அறுபது லட்சம் சம்பளம் பெற்று, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த ரவி, தன் வாழ்வில் முதன்முறையாகத் தன்னை மிகவும் சிறியவனாக உணர்ந்தான். மகாத்மாவின் பேச்சு ரவியை யோசிக்க வைத்தது.

'இங்கே, மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிரில், 18,875 அடி உயரத்தில், அதிகாலை இரண்டு மணிக்கு மரணத்தின் நிழலில், ஒரு நாளைக்கு ரூபாய் 650 சம்பளம் என்பது மகாத்மாவிற்குப் பெரிய தொகையாகத் தோன்றுகிறது. மனத் திருப்தியுடன் பணி செய்கிறான். நமக்கு மாதம் ரூபாய் ஐந்து லட்சம் சம்பளம் கிடைத்தும் மன நிம்மதி இல்லை. அநாவசிய டென்ஷன் வேறு. நாட்டிற்காகவும் ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. என்ன வாழ்க்கை?

இதையும் படியுங்கள்:
சிறுகதை: நாலும் அறிந்த நாரதர்!
சிறுகதை | Driver and Ravi

நாம் தேசத்திற்காக ஏதோ செய்கிறோம் என்கிற உணர்வுதான் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது. நாட்டுப்பற்று என்பது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகள் கோஷமிடுவதோ அல்லது வாக்குவாதங்களில் ஈடுபடுவதோ கிடையாது. அது தியாகம், ஒழுக்கம் மற்றும் கடமை உணர்விலிருந்து பிறக்கிறது' என்கிற ஞானோதயம் ஏற்பட்டது ரவிக்கு.

தங்களது விடுதியில் இறங்குகையில், மகாத்மாவின் காய்ந்துபோன கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக்கொண்டவன், அவனுக்கு மனதார நன்றி கூறினான். ரூபாய் 2,000ஐ, ரவி டிப்ஸாக கொடுத்ததைக்கூட, மகாத்மா வாங்க மறுத்துவிட்டான்.

இளைய தலைமுறைகளுக்கும், தன்னுடைய பிள்ளைகளுக்கும் நாட்டிற்கு நல்லது செய்யும் பண்பை கற்பிப்பது மிகவும் அவசியம் என்று மனதில் தீர்மானித்தான் ரவி.

logo
Kalki Online
kalkionline.com