

உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்ட 2 கதைகள்:
1. நன்றியுணர்வு..!
மகிழ்ச்சியுடன் தொடங்கியது அந்த பயணம்.
சங்கரும், அவர் மகனும் காரை செலுத்த சுகமாக வந்து கொண்டிருந்தனர். நாம் ஒன்று நினைக்க நடப்பது எதிர்பாரத ஒன்றாக இருந்தது. சென்னையிலிருந்து பெங்களூரு பயணம்.
கோலார் தாண்டி கார் மக்கர் செய்ய, மேலும் ஓட மறுத்து விட்டது. ரிப்பேர்! அவர்கள் தங்களுக்கு தெரிந்த வேலையை பார்த்தனர். ஒன்றும் உபயோகபடவில்லை.
அருகில் இருந்தவர்களை விசாரித்து மெக்கானிக் ஒருவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்தார்கள்.
வந்த மெக்கானிக் ரிப்பேர் ஆன காரைப் பார்த்ததும் தனக்கு அமைந்த சந்தர்ப்பமாக கருதி ஆதாயம் பார்க்க முற்பட்டார்.
அவர் ரிப்பேர் செய்து வண்டியை ஓட வைக்க சொன்ன தொகைக்கு ஒரு ஓடும் காரையே விலைக்கு வாங்கி விடலாம் போலிருந்தது.
என்ன செய்வது என்று சங்கரும், மகனும் கூடி ஆலோசித்தனர்.
கூடி சிந்தித்தால் உரிய விடை கிடைக்காமலா போய் விடும். கிடைத்தது. அதை செயல்படுத்தினர். எதிர்பாரத நிகழ்வுகளால் சில கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. தவிர்க்க முடியவில்லை.
மறுநாள் அந்த நின்று போன காரை ஒரு மாதிரி ரிப்பேர் செய்து திரும்ப சென்னைக்கு ஓட்டிச் சென்றனர். அங்கிருந்து வந்த மெக்கானிக் ஷெட் வைத்து இருக்கும் அனுபவம் மிக்க மெக்கானிக்.
இடையில் நடந்தது என்ன..?
ரிப்பேர் செய்ய மிக அதிக விலை கூறிய மெக்கானிக்கிடம் (அவர் யார் என்றே வேறு தெரியாது) பழுதான காரை விடாமல், சங்கர் தனது சென்னை மெக்கானிக்கிற்கு போன் செய்து விவரங்களை கூறினார். அவர் கவலைப் பட வேண்டாம் நான் உடனே பஸ் அல்லது லாரி பிடித்து வருகிறேன் என்று உறுதி அளித்து தனது உபகரணங்களுடன் பயணத்தை ஆரம்பித்தார்.
மெக்கானிக் வந்து பார்த்ததும் என்ன காராணம் என்று புரிந்துக் கொண்டார். தேவைக்கு ஏற்ப ரிப்பேர் செய்து காரை சென்னைக்கு ஒட்டி சென்றார்.
சங்கரும், அவர் மகனும் பெங்களூர் சென்றனர்.
சங்கர் போன் செய்ததும் அந்த மெக்கானிக் உடனடியாக கிளம்பி வந்ததற்கு முக்கிய காரணம் நன்றியுணர்வே (gratitude).
சில வருடங்களுக்கு முன்பு இதே மெக்கானிக், ஒரு கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வந்தார். மிக திறமைசாலி. நேர்த்தியாகவும், கவனத்தோடும், ஈடுபாட்டுடன் வேலை செய்வார்.
தன் வீட்டு அருகில் அந்த கடையில் வேலை செய்தவரின் திறமையை கண்டு வியந்த சங்கர் அவரை ஊக்குவித்தார்.
தனக்கு தெரிந்த வங்கி மூலம் கடன் பெற வழிவகுத்தார். அந்த மெக்கானிக்கும் தனியாக தொழில் தொடங்கினார்.
மேலும் அவர் வேலை செய்த இடத்தில் இருந்த பல்வேறு கார்கள், வண்டிகளுக்கு ரிப்பேர் செய்ய சிபாரிசு செய்து இந்த மெக்கானிக்கிற்கு தொழில் விருத்தி அடைய உதவினார் சங்கர்.
தொடர்ந்து பல்வேறு வண்டிகள் இந்த மெக்கானிக் ஷெட்டுக்கு வந்த வண்ணம் இருந்தன. அவரது தொழில் விருத்தி அடைந்தது.
இவர் அன்று இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பொழுது போன் கால் வந்ததும் உடனடியாக சென்னையிலிருந்து கிளம்பி வர தூண்டியது நன்றியுணர்வே.
சாரதா 27 வயது மங்கை. நடுத்தர குடும்பத்தை சார்ந்தவள். தாய், தம்பியுடன் வசிக்கிறாள். அவள் ஒரு நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பணி புரிகிறாள். தினமும் காலை குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகம் சென்று விடுவாள். இரண்டு பஸ்கள் பிடித்து அலுவலகம் செல்வாள். ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக் கொள்ள மாட்டாள். நன்றாக வேலை செய்வாள். அவள்தான் முதலில் அலுவலகம் சென்று விடுவாள். பிறகுதான் அந்த கிளை மானேஜர் வருவார்.
ஒரு குறிபிட்ட தினம் அவள் குறித்த நேரத்தில் அலுவலகம் அடையவில்லை. சிறிது நேரம் கழித்து வந்த மானேஜர் கிளை அலுவலகம் திறக்கப் படாமல் இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தார். தன் கை வசம் இருந்த சாவியினால் பூட்டை திறந்து அலுவலகம் உள்ளே சென்றார். செல் போனில் சாரதா நம்பருக்கு போன் செய்தார். பேச முடியவில்லை. நேரம் சென்று கொண்டு இருந்தது. சாரதாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. சாரதாவின் நிலைமை அறிந்ததால் மேலும் கவலை தொற்றிக் கொண்டது மானேஜருக்கு. சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து போன் வந்தது.
"சார், எதிர்பாரத விதமாக நேரம் ஆகி விட்டது. எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் வந்து விளக்குகிறேன். மன்னிக்கவும்..", என்று கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே அவள் போன் கட் ஆகி விட்டது. எவ்வளவு ட்ரை செய்தும் கிடைக்கவில்லை.
அங்கு என்ன நடந்தது என்பதை கவனிப்போம்.
வழக்கம் போல் முதல் பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து சென்றாள் அடுத்த பஸ் பிடிக்க. சிறிது தூரம் நடந்து திரும்பி சென்று அடுத்த பஸ் மெயின் ரோட்டில் பிடிக்க வேண்டும். அப்படி செல்லும் பொழுது ரோடு சைடில் அலுவலகம் செல்ல வேண்டிய ஒரு பெண்மணி நிறை மாத கர்ப்பிணி ஒரு கல்லின் மீது உட்கார்ந்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். அந்த காட்சியை கண்டு திட்டுக்கிட்ட சாரதா அந்த பெண்மணி அருகில் சென்று வினவினாள். அந்த பெண் தன் நிலைமையை விளக்கி உடல் நலம் சரியில்லை. குடும்ப சூழ்நிலை கட்டாயத்தில் இந்த நிலைமையிலும் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது என்று கூறி மேலும் கண்ணீர் விட்டாள். நிலைமையை புரிந்துக் கொண்ட சாரதா அந்த பெண்ணை ஆட்டோ பிடித்து நர்சிங் ஹோமிற்கு அழைத்து சென்றாள்.
நர்சிங் ஹோம் மற்றும் அவள் கணவன் விவரங்கள் பெற்று அந்த பெண்ணுக்கு தைரியம் கூறி அழைத்துச் சென்று நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தாள் (அந்த பெண் செக் அப்பிற்கு சென்று வந்த அதே நர்சிங் ஹோமில்). அங்கு செல்வதற்குள் சாரதா அந்த பெண்மணியின் கணவனுக்கு போன் செய்து விவரம் தெரிவித்தாள். அட்மிட் செய்த பிறகு அங்கேயே வெயிட் செய்தாள் சாரதா. அந்த பெண்மணியின் கணவன் வர தாமதம் ஆயிற்று.
அவர் வந்த பிறகு விடைப் பெற்று தன் அலுவலகம் சென்றாள் ஆட்டோவில் வந்த கணவன் மனமார நன்றிகள் தெரிவித்தார். அலுவலகம் சென்றதும் விவரங்கள் தன் மானேஜரிடம் விளக்கினாள் சாரதா. அவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டு சாரதாவை வெகுவாக பாராட்டினார்.
சாரதா இடை வெளி விட்டு அந்த பெண்ணின் கணவருக்கு போன் செய்து அந்த பெண்மணி உடல் நலம் பற்றி விசாரித்தாள். மாலை சுமார் 4 மணி அளவில் போன் வந்தது அந்த பெண்மணிக்கு அழகான பெண் தேவதை பிறந்து இருப்பதாக, சுக பிரசவத்தில். கேட்டதும் சாராத மிக்க மகிழ்ச்சி அடைந்து தான் வணங்கும் கடவுளுக்கு நன்றி கூறினாள்.
குழந்தை பிறந்த விவரத்தை தன் மானேஜரிடம் பகிர்ந்துக் கொண்டாள். அலுவலகத்தில் இருந்து நேராக நர்சிங் ஹோம் சென்று அந்த பெண்மணியையும், குழந்தையையும் பார்த்தாள்.
சாரதாவை கண்ட அந்த பெண்மணி கைகளை கூப்பி கண்களில் கண்ணீர் மல்க நன்றிகள் கூறினாள். அழகான அந்த குழந்தையை கைகளில் எடுத்து மகிழ்ந்தாள் சாரதா.
சிறிது நேரம் இருந்து விட்டு வீடு திரும்பினாள் சாரதா. சில தினங்களுக்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு சென்றாள், அவர்கள் கட்டாயப் படுத்தி அழைத்ததால்... அன்று அந்த குட்டி இளவரசிக்கு பெயர் சூட்டும் விழா. பரிசு பொருளுடன் சென்ற சாரதாவிற்கு மிக்க மரியாதை செலுத்தி வரவேற்று உபசரித்தனர். குழந்தையை கையில் வாங்கி கொஞ்சினாள்.
"பெயர் என்ன குழந்தைக்கு?" என்று இவள் கேட்க, "சாரதா" என்று நன்றி உணர்வுடன் கோரசாக அந்த குட்டி குழந்தையின் அம்மா, அப்பா கூறினார்கள். என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள் சீனியர் சாரதா ஜூனியர் சாரதாவை பார்த்தபடியே.
அன்று சாரதாவின் மானேஜர் அவளைப் பற்றி கவலைப் பட்டதற்கு காரணம் சாரதாவால் வேகமாக எல்லோரையும் போல் நடக்க முடியாது. அவள் விந்தி விந்தி சிறிது நேரம் எடுத்துக் கொண்டுதான் நடப்பாள். அவளால் சுமைகள் தூக்க முடியாது. மேலும் அவள் இது வரையில் திருமணமே செய்துக் கொள்ளவில்லை. இருந்தும், உதவும் எண்ணம் கொண்ட சாரதா, தாய்மை உணர்வுடன் உதவி மனமகிழ்ந்தது அனைவரையும் நெகிழச் செய்தது.
