

தொட்டதுக்கெல்லாம் துரைசாமி தாத்தா, ‘நான் அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி!’ என்று பெருமை பீத்திக்கொள்வது வழக்கம். ஆனால், இப்படி பேத்தி ஒருநாள் கிரீடம் இறக்கி கிறுகிறுக்க வைத்துவிடுவாள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.
“தாத்தா வா விளையாடலாம்!” என்று பேத்தி கூப்பிட, மறுக்கமுடியாமல் பேத்தி வீட்டுக்கு வந்திருந்த தாத்தா அவளோடு விளையாடப் போனார். விளையாட்டு வினையாகும் என்று நினைத்திருந்தால் விளையாடப் போயிருக்க மாட்டார். அவர்கள் விளையாடியதென்னவோ வீட்டுக்குள்ளயேதான்.
பேத்தி ஒரு ‘மாண்டிசோரி பள்ளி மாணவி! இவரோ ஆரம்பப் பள்ளி வாரிசு! அவர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்பது சிம்ம சொப்பனம்.
ஆனால், பேத்திக்கோ அதெல்லாம் தெரியாது.
“வா தாத்தா... விளையாடலாம்.”
கூடப் போய் உட்கார்ந்தார் தாத்தா. அந்த பேத்தி குட்டிக்கு மூன்று வயதுதான் இருக்கும்.
“தாத்தா… ‘என்ன உனக்கு டீசன்சியே தெரியலை?!. ‘ஏப்ரன்’ போடாம விளையாடினா ஒடம்பெல்லாம் தூசி படும்தானே?!”
“ஓ... ஆமாம். அதுக்கென்ன இப்போ?” என்றார் துரைசாமி.
“ஏப்ரன் போட்டுக்கோ..!” என்றது குழந்தை.
“இப்போ ஏப்ரனுக்கு எங்கே போவது?” கேட்டார் துரைசாமி. நல்ல வேளை அவருக்கு ‘ஏப்ரன்’ என்பது செஃப்பெல்லம் மார்பில் போட்டுக்கொள்ளும் ஒரு ‘தொங்கு துணி கோட்!’ என்கிற வரை தெரிந்திருந்தது பெரிய விஷயம்தான்.
“ஏப்ரன் இல்லேனா என்ன? இதைப் போட்டுக்கோ”என்று தான் ஒன்றை வைத்துக்கொண்டு தாத்தாவுக்கும் ஒன்றைக் கொடுத்தது.
என்ன அது என்று பார்த்தவருக்கு வியப்புத் தட்டியது. அது ஒரு பத்து கிலோ அளவு சாமான்கள் கொள்ளப் பிடிக்கும் பெரிய துணிப்பை!. அதன் இரு கைப்பிடிகளைத் தன் இரு காதுகளிலும் மாட்டிக்கொண்டு, துணியை மார்பில் தொங்கவிட அது ஏப்ரனாக மார்பில் தவழ்ந்தது. "இது மாதிரி, நீயும் மாட்டிக்கோ தூசி படாது!’ என்றது குழந்தை.
பார்த்தவர் அதிர்ந்து போய் விக்கித்து நின்றார். ஒன்று இல்லை என்பதற்காக வருந்தாமல், இருப்பதைக்கொண்டு சூழலைச் சமாளித்த அந்தப் பேத்தியின் அறிவு, அவர் அந்தக் கால எஸ். எஸ் எல். சி எனும் மணிமகுடத்தைக் கொஞ்சம் கீழே இறக்காமல் இல்லை!
‘கல்வி என்பதே அறிவை மூடியிருக்கும் அறியாமை இருளை விலக்குவதுதானே?!’ விலக்கியது மட்டுமல்ல. காலத்துக்குக் காலம் கல்வி வளர்ந்து வருவதையும் அவருக்கு விளக்கியது!
வாக்கிங் போய் வந்தவன் வாசற்படிக்கட்டில் நெற்றியை அழுத்திப் பிடித்தபடி உட்கார, அவன் மனைவி பதறிப்போய் “ஏங்க என்னாச்சு உங்களுக்கு? இந்தாங்க, மொதல்ல ஒரு கிளாஸ் தண்ணி குடிங்க!”ன்னு கொண்டுவந்து கொடுத்து, ஆரஞ்சு மிட்டாயும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள். அவளுக்குத் தெரியும் அவருக்கு ‘லோ சுகர்’ இருக்குன்னு!
“எப்படி இருக்கு?” என்றாள்.
“பரவாயில்லை... ஆனா, கோயிலுக்குப் போறதைவிட கொடுமை வாக்கிங் போறது...” என்றான்.
“அதிலென்ன கொடுமை இருக்கு? கோயிலுக்குப் போனா மனசுக்கு நல்லது!. வாக்கிங் போறது ஒடம்புக்கு நல்லதுதானே?” என்றாள்.
“கோயில்ல எத்தனை சுத்து சுத்தனும்னு பூவையோ, இலையையோ கிள்ளிப்போட்டு, கணக்கு வச்சுக்கலாம். ஒன்பதா? பதினெட்டான்னு? ஆனா, வாக்கிங்க் போறதுல சுத்துன சுத்து எண்ணிக்கை மறந்துடறதுனால.. ஓவரா சுத்தி, கிறுகிறுப்புத்தான் வந்துடுது! இன்னைக்குன்னு கிரவுண்டை இப்படி மூன்று சுத்து... அப்படி மூன்று சுத்துன்னு மொத்தமா ஆறு சுத்து சுத்திட்டிருந்தேன்!.
அங்கிருக்கறவங்கெல்லாம், ‘என்ன சுதாகர்… நேத்து அடிச்சது இன்னும் தெளியலையா?! இப்படி, அப்படிச் சுத்தறயேங்கறாங்க?
கோயில்ல யாரு எப்படி சுத்தறாங்கன்னு யாரும் கண்டுக்கறதில்லே…! வாக்கிங்ல ஒருத்தன் சுத்தறதைக் கூடவா பார்ப்பானுக?! ‘டைமர்’ வச்சுக்கலாம்னா ஒவ்வொருநாள் ஒவ்வொரு வேகத்துல சுத்தறதுனால அதுவும் சரிப்பட்டு வரலை!.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காயா கோயிலைச் சுத்திட்டு வந்துடறேன். புண்ணியமும் கூடி வெயிட் கொறையும். அதோட, பூமியும் என்னைச் சுத்தாது இல்லையா?” என்றான்.
கல்லாவில் உட்கார்ந்திருந்தாள் கல்பனா. அவள் அப்பா பத்து பதினோரு மணிக்குமேல் பாங்க் வேலையெல்லாம் முடிச்சுட்டுத்தான் கடைக்கு வருவார்... அதுவரை கடையைத் திறந்து, வியாபாரம் பார்க்கிறதெல்லாம் அவள்தான்.
அவள் அப்பா, பதினோரு மணிக்குமேல் வரக் காரணம் பாங்க் வேலை மட்டுமல்ல... மகள் கையால் கடையைத் திறந்தால், வருமானம் ‘அமோகமா பிச்சுக்கிட்டுக் கொட்டும்!’ என்ற நம்பிக்கையும்தான்.
கல்பனாவுக்கு லட்சுமி கடாட்சம் தாண்டவமாடும் முகம். குள்ளமான உடல்வாகுதான் என்றாலும் கட்டுறுதி மிக்க உடல்! கருப்புதான்... அவர்கள் கடை ஒரு ஹார்டுவேர் கடை. பெயிண்ட், பைப் என சிவில் அயிட்டங்கள் விற்கும் கடை.
கடையைத் திறந்து காத்திருந்தாள் கல்பனா.
கடை திறந்ததுமே டூவீலரில் வந்து இறங்கினான் வைத்தி.
“என்ன வேணும்?” கனிவாய்க் கேட்டாள் கல்பனா!
“ஹாஃபனிஞ்ச் பைப்புக்கு வரும் ஒரு ஹோஸ் கப்பிளிங்க்... என்ன விலை?” கேட்டான் வைத்தி. இன்னும், அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.
அவள்தான் மவுனம் கலைத்தாள்.
‘பிவிசியா…? ஸ்டீலா டேப்பா?’ கேட்டாள்.
‘ஹீ!ஹீ!’ இளித்து… நிதானத்தை எட்டிப்பிடித்து, “பிவிசி பைப்தான்!” என்றான்.
ஒரு புனல்மாதிரி ஹோஸ் மாட்டும் கப்பிளிங்க் கொடுத்து, “ஒண்ணு முப்பது ரூபாய். எத்தனை வேணும்?”
“ஹூம்.. மூணு கொடுங்க..!” பையிலிருந்து நோட்டை எடுத்தான் பதற்றத்தில் கொடுக்க…
அவள் வாங்கிக்கொண்டு எண்ணினாள்…. மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருக்க.. ஒருகணம் யோசித்தாள். ‘சும்மா வழியறான் சரியான ஜொள்ளிப் பார்ட்டியா இருப்பான்போல….!’ நினைத்துக்கொண்டவள்... கனிவாகச் சொன்னாள்:
“உங்க மனசு மாதிரியே நோட்டும் நெறைஞ்சிருக்கு…! ரெண்டுன்னு நெனைச்சு மூணு நோட்டைக் கொடுத்துட்டீங்க?” ஒரு அம்பது ரூபாயைத் திரும்பக் கொடுக்கையில், அன்றைக்குன்னு சற்று முன்னதாகவே வந்துவிட்ட கல்பனாவின் அப்பா... நடந்ததெல்லாம் கவனித்துவிட்டு, அவன் போனதும்
“ஏம்மா.. அவன்தான் கொடுக்கறான்னா... வாங்கி ஒண்ணும் பார்க்காத மாதிரி உள்ள போட்டுட்டு, பத்துரூபா மீதியை எடுத்துக் கொடுத்து அனுப்ப வேண்டியதுதானே?” என்றார்.
“இல்லப்பா…! அது தப்பு!! நாம காசை வாங்கி கல்லாவுல போடும்போதே ‘லட்சுமி வரவு!’ன்னு சொல்லிப் போடறோம். ஏமாத்தினா.. லட்சுமி கல்லாவுல தங்குவாளாப்பா?” என்றாள்.
கல்பனாவின் அப்பா நினைத்துக்கொண்டார். ‘மகள் கடைதிறந்து கல்லாவில் உட்காருவதால் மட்டும் வருமானம் பிச்சுட்டு வருவதில்லை... அவள் நேர்மையை ஒத்துக்கிட்டு வருது... உக்காருது! இவள் போகிற வீட்டுலயும் லட்சுமியின் கடாட்சம் நிலைக்கும்..! ம்ம்.. எவன் கொடுத்து வச்சவனோ’ நினைத்துக் கொண்டார்.