முத்தான 3 'மினி' கதைகள்...!

1. காலம் மாறிப்போச்சு 2. பார்வை... 3. வாடகை வீடு
கதைகள் | tamil short stories
கதைகள் | tamil short storiesImage credit: Gemini AI
பவானி உமாசங்கர்

இலக்கியம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி என்பர். அதன் படி என்னுடைய படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை பற்றி அதிகமாக எழுத விருப்பம். நான் ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த பத்து வருடங்களாக பத்திரிகைகளுக்கு என்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறேன். இதுவரை 150 சிறுகதைகள் எழுதி உள்ளேன். இரண்டு நாவல்கள் எழுதி உள்ளேன். சிறார்களுக்காக நல்வழி கதைகள் புராணக் கதைகள் எழுதி வாசித்து சமூக ஊடகமான Spotify யில் வெளியிட்டுள்ளேன். பள்ளியில் கல்வியோடு வாழ்க்கை பாடத்தை கதை வடிவில் கற்பிப்பது என் வழக்கம்.

Updated on: 
MM strip
MM strip

1. காலம் மாறிப்போச்சு:

கதைகள் | modern Tamil arranged-marriage meeting
கதைகள் | modern Tamil arranged-marriage meetingImage credit: Gemini AI

மகன் ராமுவுக்கு பெண் பார்க்க கிளம்பும் போதே கமலத்தின் கணவர் வாசுதேவன் அவளிடம், "ஏய் எங்க அம்மா உன்னை கேட்ட மாதிரி நீ அந்த பெண்ணிடம் பாட தெரியுமா கைவேலை தெரியுமான்னு கேட்டுடாத" என்றார் ஸ்ரிட்டாக. "சரி சரி நீங்களும் பெண் வீட்டாரிடம் வரதட்சணை எல்லாம் கேட்டுடாதீங்க" என்றாள் கமலம் பதிலுக்கு.

அடுத்து ஒரு சண்டை ஆரம்பிக்கும் முன் அவர்கள் மகன் ராமு "கொஞ்ச நேரம் கம்முனு தான் இருங்களேன் இரண்டு பேரும்" என்றான் இருவரிடமும்.

பெண் வீட்டில் எந்த பரபரப்பும் இல்லாமல் சகஜமாக இவர்களை வரவேற்று உரையாடினர். பெண் பார்த்து முடித்ததும் பெற்றோரின் அனுமதியுடன் ராமவும் அந்தப் பெண் விமலாவும் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.

ஹாலில் விமலாவின் அம்மா கமலத்திடம், "என் பெண் நிறைய படிச்சிருக்கா, அவ யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், கை நிறைய சம்பாதிக்கிறா, நல்ல கார் டிரைவ் பண்ணுவா" என்றவள் "ஆமா, நீங்க வீட்டு வேலைக்கு, சமையலுக்கெல்லாம் ஆள் வச்சிருக்கீங்க தானே" என்று கேட்டாள் கடைசியாக.

விமலாவின் தந்தையோ வாசுதேவனிடம், "உங்க வீடு ஓன் ஹவுஸ் தானே, லோன் எதுவும் இருக்கா, நீங்க பேங்கில் வேலை பார்ப்பதால் உங்களுக்கு பென்ஷன் வரும் இல்லையா" என விசாரித்துக் கொண்டிருந்தார்.கமலம் வீட்டார் அங்கிருந்து கிளம்பும் பொழுது, "நாங்க நல்லா டிஸ்கஸ் பண்ணிட்டு ரெண்டொரு நாள்ல உங்களுக்கு போன் செய்கிறோம்" என்றனர் பெண் வீட்டார்.

வீடு திரும்பும் பொழுது கமலம் அலுத்தபடி, "ஏண்டா இவங்க நல்ல பதிலா சொல்லுவாங்களா" என்றாள் மகன் ராமுவிடம்.

"ம்.. அந்த காலத்தில மாப்பிள்ளை வீட்டுல தான் அப்புறமா கடுதாசி போடறோம்னு சொல்லுவாங்க. இப்போ எல்லாம் தலை கீழாயிருக்கு" என்றார் வாசுதேவன்.

"கண்டிப்பா நல்ல பதில் வரும்மா. ஏன்னா நான் அந்த பெண்ணிடம் என் சம்பள விவரம் மட்டுமல்ல; எனக்கு நல்ல சமைக்கவும் தெரியும்னு சொல்லி இருக்கேன்" என்றான் ராமு மகிழ்ச்சியாக.

*******

 2. பார்வை:

கதைகள் | Man and blind man
கதைகள் | Man and blind manImage credit: Chatgpt

என்ன பொழப்பு டா இது, மாசக்கடைசின்னா எவன்கிட்டயாவது கடனுக்கு போய் நிற்க வேண்டியிருக்கு என அலுத்த மனத்துடன் பேருந்தில் ஏறினான் ரவி. டிக்கெட் வாங்க பர்ஸை எடுத்தவன் கண்களில் சீட்டின் கீழே ஏதோ காகிதம் போல் தெரிந்தது.

உற்றுப் பார்த்தவன் மனம் கடவுளே நன்றி என களிப்பில் கும்மாளமடித்தது.

இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். எப்படி அதை எடுப்பது? மனம் திக் திக் என்று இருந்தது. யாராவது பார்க்கிறார்களா என கண்களால் சுற்றி ஒரு சர்வே செய்தான் ரவி. யாரும் பார்க்கவில்லை என தீர்மானிக்கும் பொழுது எதிர் சீட்டில் அமர்ந்திருந்த இளைஞன் ரவியையே பார்த்துக் கொண்டிருந்தான். 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தெய்வீகக் கலை!
கதைகள் | tamil short stories

அடப்பாவி இவனும் அந்த ரூபாயை பார்த்துட்டானா என நினைத்தபடி தன் பார்வையை திருப்பிக் கொண்ட ரவி அவன் வேறு பக்கம் திரும்பட்டும் என காத்திருந்தான். ஆனால் அந்த இளைஞனின் கண்கள் ரவியை உற்றுப் பார்த்தபடி இருந்தன.

ஒரு நிலையில் பொறுமை இழந்த ரவி குனிந்து அந்த பணத்தை எடுத்து நடத்துனரை மிக நல்லவன் போல் அழைத்து, "கண்டக்டர் சார் பணம் இந்த சீட்டுக்கடில இருந்தது, யாருதுன்னு கேட்டு கொடுத்துடுங்க" என்றான். தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அந்த இளைஞனுக்கு கிடைக்கக் கூடாது என நினைத்த ரவி தன் நிறுத்தம் வந்ததை அறிந்து பேருந்தில் இருந்து இறங்கினான்.

அந்த இளைஞனும் அதே நிறுத்தத்தில் ரவியின் பின்னே சற்று மெதுவாக இறங்கினான். அவன் தன்னிடம் ஏதாவது கேட்பானோ என நினைத்த ரவிக்கு பெருத்த ஏமாற்றம். அவன் தன் கையில் இருந்த கோலினால் முன்னே தட்டியபடி நடந்து சென்று கொண்டிருந்தான்.

ரவிக்கு அந்த இளைஞனின் நிலைக்கு பரிதாபப்படுவதா அல்லது தன்னை தவறு செய்ய விடாமல் தடுத்ததற்கு நன்றி கூறுவதா என்று தெரியாமல் விழித்தான்.   

*******                    

3. வாடகை வீடு:

கதைகள் | House owner son and woman
கதைகள் | House owner son and womanImage credit: Gemini AI

மாலை ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய பிரபு "பெரிய வீடு வாடகை கம்மியா, ரெண்டு வருஷமா வீட்டு பிரச்சனை இல்லாம நல்லா  இருக்கேன்னு நெனச்சேன், திரும்ப வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பிக்கணும் போல" என தன் மனைவி உஷாவிடம் புலம்பினான். 

"ஏன் ஹவுஸ் ஓனர் ஏதாவது சொன்னாரா" என்ற மனைவியிடம், "ஆமா காலைல ஆபீசுக்கு போன் செய்து அவர் பையனுக்கு அடுத்த மாசம் கல்யாணமாம், அதனால வீடு அவருக்கு தேவையா இருக்கும் போல ரெண்டு மாசத்துல நம்மை வேற வீடு பார்த்துக்க சொன்னாரு" என்றான் பிரபு சோர்வாக.

"அதெல்லாம் இருக்காதுங்க வாடகை அதிகம் ஏத்துறதுக்கு இது ஒரு சாக்கு" என்றாள் உஷா பிரபுவிடம் கடுப்பாக. "இல்ல உஷா அவங்க பையனையும் மருமகளையும் இந்த வீட்ல தனிகுடித்தனம் வைத்து விடுவார் போல" என்றான் பிரபு சலிப்பாக.

மறுநாள் பிரபு ஆபீஸ் கிளம்பிய சற்று நேரத்தில் வாசலில், "சார் " என யாரோ அழைப்பதைக் கேட்டு உஷா வாசல் கதவருகே வந்தவள் கதவை திறக்காமலேயே "என்ன வேணுங்க" என்றாள் அங்கு நின்றவனிடம்.                         

"இல்லைங்க இந்த வீடு பார்க்க..." என தயக்கத்துடன் ஆரம்பித்தவனை இடைமறித்த உஷா, "வீடு கொஞ்சம் பெருசு தாங்க. ஆனா இந்த ஏரியாவே டவுன விட்டு தள்ளி இருக்குது. அதுலயும் இந்த வீடு தெருவோட கடைசி மூலை வீடு ஒரு கடை கண்ணி போகணும்னா கூட ஒரு கிலோ மீட்டர் தாண்டி மெயின் ரோடு போனாத் தான். 

கார்னர் வீடா இருக்கிறதுனால திருட்டு பயமும் இருக்குது. அக்கம் பக்கம் எல்லாரும் வேலைக்கு போறாங்க. பேச்சு துணைக்கு கூட ஆள் கிடையாது வீட்டு பொம்பளைங்களுக்கு. அப்பப்ப செயின் ஸ்னாட்சும் நடக்குது. 

அதான் யாரும் வந்தா நான் கதவை கூட திறக்க மாட்டேன்" என உஷா மனதில் தோன்றியதை மூச்சு விடாமல் பேசினாள்.

உஷாவின் பேச்சை கேட்ட புதியவன் முகத்தில் குழப்ப ரேகைகளுடன் "நான் வரேங்க" என கூறி சென்றான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தொடுவானத்தில் ஒரு மின்னல்!
கதைகள் | tamil short stories

வீடு பார்க்க வந்த இளைஞன், தன் வீட்டுக்குச் சென்றவன், "அப்பா நம்ம வீடு இருக்கிற ஏரியா இன்னும் சரியா டெவலப்பே ஆகல,  நல்ல வேளை நான்தான் வீட்டு ஓனரோட பையன்னு அங்க குடியிருக்கிற அம்மாவுக்கு தெரியல, அவங்க அங்க குடியிருக்கறதனால, அங்க  என்னென்ன பிரச்சனைகள் இருக்குன்னு தெளிவா சொல்லிட்டாங்க. 

அதனால நான் என் கல்யாணம் முடிஞ்சு அந்த வீட்டுக்கு குடி போக விரும்பல. ஒண்ணா உங்களோட சேர்ந்து கூட்டு குடும்பமா இருக்கேன். இல்லேன்னா இங்கேயே பக்கமா வேற வீடு வாடகைக்கு பார்த்துக்கலாம் பா" என்றான் தன் தந்தையிடம்.

மாலையில் வீட்டினுள் நுழைந்த பிரபு உஷாவிடம், "ஏய் உஷா என்ன சொல்லி சமாளிச்ச வீடு பார்க்க வந்த ஓனர் பையன் கிட்ட, அவன் இந்த வீட்ல ஏதாவது மராமத்து செய்யணுமான்னு பார்க்க வந்தானாம்.

இப்ப ஓனர் நீங்களே இருங்க அந்த வீட்டுல, காலி செய்ய வேண்டாம்னாரு போனில்" என்றான் உற்சாகமாக. "அப்படியா சொன்னாரு" என ஆவலோடு கேட்ட உஷா, "அது வேற ஒண்ணும் இல்லைங்க நம்ம ஏரியாவுல என்னென்ன சிரமங்கள் இருக்குதுன்னு சொன்னேன், பையன் பயந்துட்டான் போல எப்படியோ அது நமக்கு நன்மையா தான் முடிஞ்சது.

ஆனா அந்த பையன் ஹவுஸ் ஓனர் பையன்னு எனக்கு நிஜமாவே தெரியாதுங்க" என்று முடித்தாள் உஷா ஆதங்கத்துடன். 

வீட்டு பிரச்சனை முடிவிற்கு வந்த களிப்பில் "சரி ஃப்ரீயா விடு உஷா பார்த்துக்கலாம்" என்றான் பிரபு மகிழ்ச்சியுடன்.

logo
Kalki Online
kalkionline.com