சிறுகதை: ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்!

இலவசமாகப் பொருள் வாங்கும் மோகத்தால் கணவன் செய்யும் காரியங்களால் வீட்டில் சேரும் தேவையில்லாதப் பொருட்களும் ஒரு மனைவியின் புலம்பலும் பற்றிய சிறுகதை
சிறுகதை | Husband and wife
சிறுகதை | Husband and wifeImage credit: Gemini AI
ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் கவிதைகள் எழுதியுள்ளேன். பதினைந்து தொடர்கதைகள் எழுதியுள்ளேன். மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். பல சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். சராசரி மக்களின் உணர்வுகள் சார்ந்த சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். புதுமைப்பித்தன் விருது, கி.ஆ.பெ. விஸ்வநாதம் விருது, நம்பிக்கை நாயகி, தமிழினியாள் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

Updated on: 
MM strip
MM strip

“பானு, ஒரு சந்தேகம். ரெண்டு வாரமா ஏதாவது சாமான் வாங்கிட்டு வரணுமான்னு கேட்கும்போதெல்லாம், எல்லா சாமானும் இருக்கு இருக்குன்னு சொல்லிட்டிருந்தே. இன்னிக்கு ஆஃபீஸ்ல இருந்து திரும்பி வரும்போது, ஷேவிங் கிரீம் வாங்கறதுக்காக வழக்கமா வாங்கற கடைக்குப் போயிருந்தேன். அந்தக் கடைக்காரன் என்கிட்ட என்ன கேட்டான் தெரியுமா?”

“என்ன கேட்டான்?”

“வழக்கமா நீங்கதானே சாமான் எல்லாம் வாங்குவீங்க. இப்போ என்ன நீங்க வராம அக்கா வந்து வாங்கிட்டுப் போறாங்களே? இன்னைக்குக்கூட அக்காதான் வந்தாங்க. உங்களுக்கு வேலை அதிகமாயிடுச்சா அப்படின்னு கேட்கறான். உனக்கு ஏதாவது சாமான் வேணும்னா என்கிட்டே சொல்லியிருக்கலாமே. என்கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டு நீயா ஏன் கடைக்குப் போய் வாங்கறே? இல்லேன்னா நீயே கடைக்குப் போற உண்மையை என்கிட்ட சொல்லியிருக்கணும். என்னாச்சு உனக்கு?”

வேலை முடித்து வீட்டுக்குள் நுழையும்போதே பல்வேறு கேள்விகளுடன் வந்தான் நிரஞ்சன். அவனின் பரபரப்பு கண்டு மெலிதான புன்னகையுடன் பதில் சொன்னாள் பானு.

“வேற என்ன பண்றது? உங்ககிட்ட ஒரு சாமான் வாங்கிட்டு வரச் சொன்னா, அதுகூட ஒரு நாலஞ்சு சாமான் வாங்கிட்டு வரீங்க. ஒரு நிமிஷம் கிச்சனுக்கு வாங்க.

எவ்வளவு மளிகை சாமான் உபயோகம் இல்லாம வேஸ்ட் ஆகுதுன்னு காட்டறேன். என்ன யோசிக்கறீங்க, நானே ஏன் கடைக்குப் போறேன்னு கேட்டீங்க இல்ல, அதுக்கு பதில் தெரியணும் இல்லையா. வாங்க கிச்சனுக்கு.

இதைப் பார்த்தீங்களா, கோதுமை மாவு வாங்கிட்டு வரச் சொன்னா, எந்த கோதுமை மாவுக்கு ஃப்ரீ கிடைக்குதுன்னு பார்த்து வாங்கிட்டு வரீங்க. இப்போ ஃப்ரீயா கிடைச்ச உப்பு மட்டுமே அஞ்சு பாக்கெட் இருக்கு. கோதுமை மாவு செலவாகற அளவுக்கு உப்பு செலவாகுமா?

இதையும் படியுங்கள்:
சிறுகதை : காவிரிப் பெண்ணாள்!
சிறுகதை | Husband and wife

சமையலுக்கு எண்ணெய் வாங்கச் சொன்னா, எந்த எண்ணெய்க்கு ஃப்ரீ இருக்குனு பார்த்துப் பார்த்து வாங்கறீங்க. இப்போ எண்ணெய்க்கு ஃப்ரீயா கிடைச்ச பெருங்காயம் மட்டுமே நாலு டப்பா இருக்கு.

சரி, இப்படி ஃப்ரீயா பெருங்காயம் கிடைச்சிருச்சே, தனியா பெருங்காய டப்பா வாங்கக் கூடாதுன்னாவது புரியுதா? அதுவும் இல்ல. பெருங்காயம் வாங்கினா அதுக்கு மிளகாய்த்தூள் ப்ரீன்னு சொல்லிட்டு வேற ஒரு பெருங்காய டப்பா வாங்கிட்டு வரீங்க.

சேமியா வாங்கிட்டு வரச் சொன்னா, எந்த சேமியாவுக்கு நூடுல்ஸ் பாக்கெட் ஃப்ரீன்னு பார்த்துட்டு வாங்கிட்டு வரீங்க. இப்போ அப்படி வாங்கின நூடுல்ஸ் மட்டுமே மூணு பாக்கெட் இருக்கு.

அப்போ தனியா நூடுல்ஸ் வாங்கக் கூடாதில்ல? ஆனா இந்த பிராண்ட் நூடுல்ஸுக்கு டொமேட்டோ சாஸ் ப்ரீயா கிடைக்குதுன்னு அதை வேற வாங்கியிருக்கீங்க.

சரி, மளிகை சாமான்தான் இப்படி பண்றீங்கன்னா சோப், ஷாம்பு, பேஸ்ட்டும் இப்படியேதான் வாங்கறீங்க. நான் என்ன ப்ராண்ட் சோப் யூஸ் பண்றேன், என்ன ஷாம்பு யூஸ் பண்றேன்னு இப்போ வரைக்கும் எனக்கே தெரியல.

சிறுகதை | Husband and wife
சிறுகதை | Husband and wifeImage credit: Gemini AI

எதுக்கெல்லாம் ஃப்ரீ கிடைக்குதுன்னு பார்த்து ஒவ்வொரு தடவையும் வேற வேற ப்ராண்ட் வாங்கிட்டு வரீங்க. சூப்பர் சேவர் பேக்னு மூணு சோப் ஒண்ணா இருக்கறதா வாங்கிட்டு வந்தீங்க. அந்த சோப் எல்லாம் நான் வாழ்க்கையில் உபயோகிச்சதே கிடையாது.

பரவாயில்ல, வாங்கிட்டு வந்தது வேஸ்டாகக் கூடாதுன்னு அதையே உபயோகிச்சு காலி பண்றதுக்குள்ள, இந்த ஷாம்புவுக்கு இந்த சோப் ஃப்ரீன்னு இதை வாங்கிட்டு வந்துட்டீங்க. அதோட நிறுத்தினீங்களா? இந்த ப்ராண்ட் ஷாம்பூவுக்கு டெட்டால் ப்ரீயா கொடுக்கறாங்கன்னு அதையும் வாங்கிட்டு வந்துட்டீங்க. இப்படி வாங்கி வாங்கி டெட்டால் மட்டும் அஞ்சு பாட்டில் வீட்ல இருக்கு. அந்த டேட்டாலை எதுக்கு உபயோகிக்கட்டும்?

ஊதுபத்தி வாங்கச் சொன்னா எந்த ஊதுபத்திக்கு தீப்பெட்டி ஃப்ரீயா கொடுக்கறாங்கன்னு தேடித் தேடி வாங்கறீங்க. வெறுமனே விளக்கு ஏத்தறதுக்கு மட்டும்தான் தீப்பெட்டி எடுக்கறேன். அதுக்கு எவ்வளவு தீக்குச்சி செலவாகும்? இங்கே பார்த்தீங்களா, இந்த டப்பா முழுக்க தீப்பெட்டி இருக்கு.

இப்படி, எதுக்கு எது இலவசம்னு தினமும் விளம்பரம் பார்த்துட்டுப் போய் சாமான் வாங்கிட்டு வரீங்க. நான் வேணும்னு சொல்ற சாமான்கூட சேர்த்து இன்னும் பத்து சாமான் வீட்டுக்கு வருது, இலவசம்ங்கற பேர்ல.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மகள் என்ன அப்பாவின் அடிமையா...?
சிறுகதை | Husband and wife

உங்களோட இலவச மோகத்தால வீட்டுல நிறைய பொருள்கள் தேவையில்லாம சேர்ந்து கிடக்கு. இதை நான் உங்ககிட்ட எவ்வளவோ தடவை சொல்லிப் பார்த்தேன். நீங்க கேட்கற மாதிரி தெரியல. சரி, உங்களைக் கடைக்கு அனுப்பினாத்தானே இந்தப் பிரச்சனை. அதனாலத்தான் நானே போய் வாங்க ஆரம்பிச்சுட்டேன். இப்ப சொல்லுங்க நான் என்ன பண்ணட்டும்? நான் கடைக்குப் போனது சரியா, தப்பா?”

தன் மனதில் இருந்த ஆற்றாமைகளை எல்லாம் புலம்பித் தள்ளிய பானு, தனக்கு எதுவும் பதில் சொல்லாமல் பையில் எதையோ குடைந்து கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள்.

“என்னங்க, என்ன ஆச்சு? நீங்க கேட்ட கேள்விக்கு வாய் வலிக்கற அளவுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்துட்டேன். நீங்க என்னவோ ரொம்ப சீரியஸா பைல எதையோ தேடிட்டிருக்கீங்க?”

“இல்ல பானு, இந்த ஷேவிங் கிரீம்க்கு ப்ளேடு ப்ரீயா தரதா விளம்பரத்துல காட்டினாங்க. கடைல அதைக் கொடுக்காம ஏமாத்திட்டான். பானு, நீ எனக்கு காஃபி மட்டும் கலந்து வை. நான் போய் கையோட இதுக்கு இலவசமா இருக்கற ப்ளேடை வாங்கிட்டு வந்துடறேன்.”

தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள் பானு.

logo
Kalki Online
kalkionline.com