

குளிர்காலம் வந்தாலே இருமல், சளி, ஒவ்வாமை மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களும் சேர்ந்து வந்து விடும். இந்த காலத்தில் சுவாசக் கோளாறு மற்றும் ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்களுக்கு சிரமமாகத்தான் இருக்கும். மேலும், தனிநபரின் நோய் எதிர்ப்பு சக்தியும் இந்த நேரத்தில் குறையலாம். இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊதா நிற உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்த பலனிப்பதாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஊதா நிற உணவுகள் ஏன்?
இயற்கையாக ஆந்தோசயனின்கள் என்ற தாவர நிறமிகள், ஊதா நிறத்தை சில தாவரங்களின் காய்கள் மற்றும் பழங்கள் ஆகியவற்றிற்கு வழங்குகின்றன. இந்த நிறமிகள்தான் அந்த உணவுப் பொருட்களின் கருஊதா அல்லது கருநீல நிறத்திற்கு காரணமாக இருக்கின்றன.
இந்த நீலநிற உணவுப் பொருட்கள் குளிர்காலத்தில் எளிதாகக் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன. ஊதா நிற உணவுகள் பற்றியும், குளிர் காலத்தில் அவை எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன என்பதையும் இப்போது பார்ப்போம்.
ஆந்தோசயனின் செயல்பாடுகள்:
ஆந்தோசயனின்கள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள். இவை நோய் எதிர்ப்பு செல்களைப் பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. ஊதா நிற உணவுகள் நோய் எதிர்ப்பு கவசமாகச் செயல்படுகின்றன. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியில் கிட்டத்தட்ட 70% குடலுடன் இணைந்துள்ளது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, குளிர்காலத்தில் அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜனேற்றிகள் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
குளிர்காலத்தில் உண்ண வேண்டிய ஊதா நிற உணவுகள்:
புளுபெர்ரிஸ்: உலகிலேயே அதிக ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்களில் புளுபெர்ரியும் ஒன்று. இதை தினமும் குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி குளிர்கால சோர்வைக் குறைக்கிறது.
நாவல் பழம்: இது இயல்பாகவே சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பண்பினைக் கொண்டது. இதனால், நீரழிவு நோயாளிகள் அதிகம் விரும்பும் பழங்களில் ஒன்றாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் குடலின் பாக்டீரியா சமநிலையிலும் பங்கு வகிக்கிறது. இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தகின்றன.
கருப்பு திராட்சை: கருப்பு திராட்சை அடர் ஊதா நிறம் கொண்டது. இதில் ரெஸ்வெராட்ரோல் என்ற வேதிப் பொருள் நிறைந்ததுள்ளது. இது நோய் எதிர்ப்பு செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் முகப் பொலிவுக்கும், சருமத்திற்கும் ஊட்டமளிக்கிறது.
பீட்ரூட்: பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அதிக இரத்த அழுத்தத்தையும் கட்டுபடுத்துகிறது. ஆக்கிஜனேற்றத்தை அதிகரித்துக் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது. இவை அனைத்தும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இதை சாறாகவும், வேக வைத்த கூட்டு பொரியலாகவும் சாப்பிடலாம்.
ஊதா முட்டைக்கோஸ்: இந்த முட்டைகோஸில் குடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இந்த முட்டைக் கோஸை பச்சையாக சாலட்களிலும், வதக்கி உணவுப் பொருளாகவும் சேர்த்து சாப்பிடலாம்.
ஊதா சர்க்கரைவள்ளி: பல நாடுகளில் காலை உணவிலும், தினசரி உணவிலும் கட்டாயம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இடம் பெறுகிறது. சாதாரண சர்க்கரைவள்ளிக் கிழங்கை விட ஊதா நிற வகையானது அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு செல் செயல்பாட்டை ஆதரிக்கிறது. இதை வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது.
குளிர்காலத்தில் தினமும் குறைந்தது ஒரு ஊதா நிற உணவையாவது உங்கள் உணவில் சேர்க்கவும். பட்டியலில் உள்ளவை மட்டுமல்லாமல் பிளம்ஸ், கத்திரிக்காய், ஊதா காலிஃபிளவர், ஊதா நிறத்தில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்துமே ஆந்தோசயனின் நிறைந்தவை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)