தினமும் ஊறுகாய் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்து உங்களுக்குத் தெரியுமா?

தயிர் சாதம் மற்றும் சாப்பாட்டுடன் தினமும் அதிகளவில் ஊறுகாய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சோடியம் ஆபத்துகளும் மருத்துவ எச்சரிக்கைகளும்.
Pickle | ஊறுகாய்
Pickle | ஊறுகாய்Image Credit: ChatGPT
முனைவர். த. சரவணக்குமார்

முனைவர் த.சரவணக்குமார், மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் உதவிப் பேராசிரியர். நானோகிரிஸ்டல் ஆய்வில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்; Q1 தரவரிசை இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அறிவியலை எளிமையாக விளக்குவதோடு, கவிஞர், பாடலாசிரியர், நாட்டுப்புறப் பாடகராகவும் இயங்குகிறார்.

Updated on: 

'தயிர் சாதமா இருக்கட்டும்... சாம்பாரா இருக்கட்டும்... ரசமா இருக்கட்டும்... ஊறுகாய் இல்லாம சாப்பாடு எப்படி இறங்கும்?'

சாப்பிட உட்கார்ந்ததும் முதலில் ஊறுகாய் டப்பாவைத் தேடும் நண்பர்கள், உறவினர்களைப் நம்ம ஊரில் நிறைய பார்த்திருப்போம்!

சுடுசுடு சாதம். கொஞ்சம் தயிர். அதோடு ஒரு சின்ன துண்டு மாங்காய் ஊறுகாய்...

அடடா! சாப்பாட்டின் சுவையே மாறிடும்!

ஊறுகாய் என்றாலே நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு நமக்கு அது பிடித்தமான உணவு. ஆனால், அந்தச் சின்ன ஊறுகாய் துண்டை தினமும் அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறோமா?

ஊறுகாயை விட்டு விட வேண்டும் என்பதல்ல விஷயம்.

அளவோடு சாப்பிட வேண்டும் என்பதுதான் விஷயம்!

ஊறுகாயில் என்ன இருக்கிறது?

ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உப்பு, எண்ணெய், புளிப்பு சார்ந்த பொருட்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஊறுகாயின் சுவையும் தனித்துவமாக இருக்கிறது. மேலும் வீட்டில் தயாரிக்காத வெளியிலிருந்து வாங்கும் சில ஊறுகாய் பாக்கெட்டுகளில் பாட்டில்களில் சில ரசாயன கலவைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சேர்க்கப்படுகிறது (சோடியம் பென்சோயேட், அசிட்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம்).

ஆனால், இவற்றில் குறிப்பாக உப்பு கவனிக்க வேண்டிய ஒன்று.

உப்பில் இருக்கும் முக்கியமான கனிமம் சோடியம். உடலுக்கு சோடியம் தேவைதான். ஆனால் தேவைக்கு அதிகமாகச் சென்றால் அது உடலுக்கு நல்லதல்ல.

உலக சுகாதார நிறுவனம், பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கு குறைவான சோடியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இது மொத்த உப்பில் 5 கிராமுக்கும் குறைவாகும்.

அப்படியென்றால், ஊறுகாய் மட்டும் தான் நம்முடைய உப்பு உட்கொள்ளும் அளவுக்குக் காரணமா?

இல்லை!

சமையலில் சேர்க்கும் உப்பு, அப்பளம், சாஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகள் என்று நாள் முழுவதும் பல வழிகளில் சோடியம் நம்முடைய உணவில் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

Pickle | ஊறுகாய்
Pickle | ஊறுகாய்Image Credit: Gemini

அதனால் ஊறுகாயையும் அதே கணக்கில் பார்க்க வேண்டும்.

'ஒரு சின்ன துண்டுதானே?' என்று நினைக்காதீங்க!

இதுதான் நம்முடைய பிரச்சினை.

'நான் ஊறுகாய் கொஞ்சம்தான் சாப்பிடுறேன்!' என்று சொல்வோம்.

ஆனால் அந்த 'கொஞ்சம்' காலை உணவில் ஒரு கரண்டி...

மதிய உணவில் இரண்டு கரண்டி… இரவு தயிர் சாதத்துடன் இன்னும் கொஞ்சம்… இப்படி நாள் முழுவதும் சேர்ந்தால்?

நாம் நினைப்பதைவிட உப்பு உட்கொள்ளும் அளவு அதிகமாகிவிடலாம்.

FSSAI-யின் Eat Right India வழிகாட்டுதலிலும் ஊறுகாய், அப்பளம், சட்னி, சாஸ் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

உப்பு அதிகமானால் என்ன?

உணவில் சோடியம் அதிகமாக இருப்பது ரத்த அழுத்தம் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். நீண்டநாட்களாக, உயர் ரத்த அழுத்தம் இதயநோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று WHO குறிப்பிடுகிறது.

அதனால் ஊறுகாயைப் பார்த்தாலே பயப்பட வேண்டியதில்லை.

ஊறுகாய் எதிரி அல்ல; அளவுக்கு அதிகமான உப்புதான் நமக்கு எதிரி.

இதையும் படியுங்கள்:
இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுகிறீர்களா? உங்கள் கல்லீரல் என்ன சொல்கிறது?
Pickle | ஊறுகாய்

அப்படியென்றால் ஊறுகாயை எப்படி சாப்பிடலாம்?

முதலில், ஊறுகாயை ஒரு முக்கிய உணவாக நினைக்காமல், சுவைக்காகச் சேர்க்கும் சிறிய அளவு உணவாக வைத்துக்கொள்ளலாம்.

சாப்பாட்டில் ஏற்கனவே உப்பு அதிகமாக இருந்தால், அதோடு கூடுதலாக ஊறுகாய் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

வீட்டில் ஊறுகாய் தயாரிக்கும்போது உப்பு மற்றும் எண்ணெயின் அளவை கவனிக்கலாம்.

பாக்கெட் ஊறுகாய் வாங்கினால், அதன் லேபிளில் உள்ள ஊட்டச்சத்து விவரங்களைப் பார்ப்பது நல்ல பழக்கம்.

முக்கியமாக, ஒரே ஊறுகாயை மட்டும் நம்பாமல், காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற இயற்கையான உணவுகளையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கடைசியாக ஒரு சின்ன நினைவூட்டல்… ஊறுகாயைத் திறந்தவுடன்,

'இது நல்லதா? கெட்டதா?' என்று கேட்பதைவிட,

'எவ்வளவு சாப்பிடுறேன்?' என்று கேட்பது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

சாப்பாட்டுக்கு சுவை சேர்க்க ஒரு சின்ன ஊறுகாய் போதும்.

ஊறுகாய் சுவைக்காக இருக்கட்டும்...

உப்பு நம் உடலுக்கு சுமையாக மாறாமல் விழிப்புடன் இருப்போம்! ஆரோக்கியமுடன் வாழ்வோம்!

இதையும் படியுங்கள்:
சீரியல் பார்த்தால் மூளை வடிவம் மாறுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!
Pickle | ஊறுகாய்

Reference: