
இன்றைய வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் என்றால் ஜிம், டயட், தனி நேரம் என்று நாம் நினைக்கிறோம். வேலைப் பளு அதிகம் என்பதால், 'நாளைக்கு தொடங்கலாம்' என்று உடற்பயிற்சியை தள்ளிக்கொண்டே போகிறோம். ஆனால் உண்மையில், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிய திட்டங்களோ, அதிக செலவோ தேவையில்லை.
நாம் தினமும் செய்யும் சாதாரண வேலைகளிலேயே உடலை இயக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அவற்றை சரியாக பயன்படுத்தினால், உடற்பயிற்சி தனியாக செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. வாழ்க்கை முறையை கொஞ்சம் மாற்றினால் போதும். அந்த சிறிய மாற்றங்களே காலப்போக்கில் பெரிய பலனை தரும்.
கடை, மார்க்கெட், கோவில் போன்ற இடங்களுக்கு நடந்தே செல்லலாம். இது தினசரி இயல்பான வழக்கமாக மாறும். சிறிய தூரம் நடந்து செய்வது கூட உடலுக்கு பெரிய பலன் தரும். உடற்பயிற்சிக்காக மட்டும் நடக்க வேண்டியதில்லை.
மண்ணில் வேலை செய்வது உடலை முழுவதும் இயக்கும். குனிந்து, நிமிர்ந்து, குழி தோண்டுவது, தண்ணீர் ஊற்றுவது போன்ற சின்ன சின்ன வேலைகள் நல்ல பயிற்சியாக அமையும். நிதானமாக செய்வதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
சமையல் ஒரு வேலை மட்டும் அல்ல, அது நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு பயிற்சி. சமையல் வேலையில் நின்றுகொண்டு காய்கறிகளை வெட்டி, உணவை சமைக்கக் கிளறுவது போன்ற செயல்கள் உடலை நன்றாக இயங்க வைக்கும். நீண்ட நேரம் உட்காராமல் இருக்க உதவும். இது தினசரி உடற்பயிற்சியாக மாறும்.
இப்போது எல்லா வேலைகளுக்கும் இயந்திர கருவிகள் பெருகி விட்டாலும், அவ்வப்போது நாம் துடைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்தல் நலம் தரும். சிறிய வேலைகளும் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதனால் தனியாக ஜிம் தேவையில்லை.
நீங்கள் வெளியில் சென்றால் உங்கள் வேலை முதல் இரண்டு மாடிகளில் இருந்தால் லிப்ட்டைத் தவிர்த்து படிக்கட்டைப் பயன்படுத்துங்கள். மேலே கீழே நடப்பது இதயத்திற்கு நல்லது. கால்களுக்கு வலிமை கிடைக்கும். இந்த சிறிய முயற்சி பெரிய நன்மை தரும்.
தினமும் ஒரு அரை மணி நேரத்திற்கு நாற்காலிக்கு பதிலாக தரையில் உட்காருங்கள். தரையில் அமர்ந்து மீண்டும் எழுவது உடலுக்கு நல்ல பயிற்சி. மூட்டுகள் நெகிழ்வாக இருக்கும். உடல் இயல்பாக சுறுசுறுப்பாகும்.
உங்களால் முடிந்த அளவு வீட்டின் கிராசரி பைகள் போன்றவற்றை நீங்களே தூக்குங்கள். இது கை, தோள், முதுகு வலிமையை அதிகரிக்கும். இது இயற்கையான strength training ஆகும். தினசரி வாழ்க்கையிலேயே பயிற்சி கிடைக்கும்.
அன்றைய நாளில் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு தொடங்குங்கள். இலக்குடன் வேலை செய்யும் போது நமது உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். இது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. சோம்பேறித்தனத்தை குறைக்கும்.
நண்பர்கள், உறவினர்களை மொபைலில் பேசுவதோடு வாரம் ஒருமுறை நேரில் சென்று சந்தியுங்கள். இது உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். சமூக உறவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஒரு சிலர் காலையில் வேலை முடிந்ததும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து டீவி பார்ப்பர் அல்லது மொபைல் பயன்படுத்திக் கொண்டு இருப்பர். அதை தவிர்த்து, அடிக்கடி கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்குங்கள். சிறிய வேலைகளைச் செய்யுங்கள். இது உடலை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்கும்.
நமது உடல் ஆரோக்கியம் பெரிய விஷயங்கள் செய்தால்தான் கிடைக்கும் என்பதில்லை. தினமும் நாம் செய்யும் சிறிய வேலைகள் மற்றும் பழக்கங்களாலேயே அது கிடைக்கும். நீங்கள் தினமும் ஜிம் செல்ல முடியாவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். அதற்குப் பதிலாக, தினசரி வாழ்க்கையில் உடல் இயக்கம் இருக்க வேண்டும். நடப்பது, படிக்கட்டில் ஏறுவது போன்ற சிறிய செயல்களும் உதவும். இப்போது நம் வாழ்க்கையில் வசதிகள் பெருகியதால் நமக்கு வேலைகள் குறைந்து வருகிறது. இதனால் உடல் சோர்வாகவும் பலம் குறைவாகவும் ஆகிறது.
ஆனால் தினமும் கொஞ்சம் நடந்தாலும், சிறிய வேலைகள் செய்தாலும் உடல் மெதுவாக புத்துணர்ச்சி பெறும். எந்த வயதிலும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கான ரகசியம் — அதிகமாக செய்வது தேவையில்லை; தினமும் தொடர்ந்து செய்வதுதான் முக்கியம். தினசரி நாம் செய்யும் சிறிய பயிற்சிகள் மற்றும் வேலைகள் தான், நமது நீண்ட கால ஆரோக்கியத்தின் பெரிய அடித்தளம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)