ஆரோக்கிய சிறுகதை: தடம்!

அருகிலுள்ள கடைக்குச் செல்லக் கூட வாகனங்களைப் பயன்படுத்துவதால் நாம் இழப்பது என்ன? என்பதை இந்த ஆரோக்கிய சிறுகதை மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
ஆரோக்கிய சிறுகதை | a family with cycle
ஆரோக்கிய சிறுகதை | a family with cycleAI Image
Updated on

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் ஒரு சிறு காரியத்தின் பின்னணியில், நமது ஆரோக்கியமும் பொருளாதாரமும் மெல்ல மெல்ல கைநழுவிக் கொண்டிருக்கிறது என்றால் ?

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுது, வீட்டில் அனைவரும் அமைதியாகக் காபி அருந்திக் கொண்டிருந்த தருணத்தில், ரவி தன் மனைவியைப் பார்த்து சாதாரணமாகக் கேட்டார்.

"கமலா, நம்ம தெருமுனையில இருக்குற கடைக்குக் கிளம்புறேன்... வண்டி சாவியை எங்கே வச்சிருக்கே?"

காபி டம்பளரை மேஜை மீது வைத்த கமலா சிரித்துக்கொண்டே கேட்டாள், "ஏங்க... சில நூறு மீட்டர் தூரத்துல இருக்குற கடைக்குக் கூட நடந்து போகாம, எப்பவும் வண்டி சாவியைத் தேடுறீங்களே... இது உங்களுக்கு தவறான பழக்கமா தெரியலையா?"

ரவி சற்றே தயங்கி, "அதுனால என்ன கமலா... காசு இருக்கு, வண்டி இருக்கு, நேர மிச்சத்திற்குப் பயன்படுத்துறேன். இதுல தவறான பழக்கம்னு சொல்றதுக்கு என்ன இருக்கு?" என்று கேட்டார்.

அருகில் அமர்ந்திருந்த மகள் ஆகாஷினி குறுக்கிட்டுச் சொன்னாள், "அங்கேதான் அப்பா நாம கவனிக்கத் தவறிய ஒரு சுவாரசியமான வாழ்வியல் முரண்பாடு ஒளிஞ்சிருக்கு!"

நவீன வாழ்க்கையின் முரண்பாடு

"அப்படி என்ன முரண்பாடு?" ரவி இப்போது சற்றே யோசிக்கத் தொடங்கினார்.

மனைவி கமலா "ரொம்ப சிம்பிள்ங்க... முதல்ல, 'கொஞ்சம் தூரம்னா கூட வாகனத்துல போறதுதான் சௌகரியம்'னு நம் மனம் நினைக்கத் தொடங்குது. நாமளும் அதை நம்பி வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கிறோம்.

"தொடர்ச்சியாக நடப்பதைக் குறைக்கும் போது, நம்மையறியாமலே உடலில் தொப்பையும், உடல்சார்ந்த உபாதைகளும், மன அழுத்தமும் குடியேறத் தொடங்குகின்றன. அந்த உடலநலக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக 'ஃபிட்னஸ் சென்டர்' என்றும், மருத்துவ ஆலோசனைகள் என்றும் மீண்டும் தனியாக நேரத்தையும் பணத்தையும் ஒதுக்குகிறோம்!

இதையும் படியுங்கள்:
திங்கள் கிழமை சோர்வுக்கு இதான் காரணமா? உயிரைக் குடிக்கும் அமைதியான அச்சுறுத்தல்!
ஆரோக்கிய சிறுகதை | a family with cycle

"மாதந்தோறும் தேவையில்லாத எரிபொருள் செலவுகளும், வண்டி பராமரிப்புச் செலவுகளும் நம் பணப்பையைக் காலி செய்வதோடு, வாகனங்கள் உமிழும் புகையால் நம்மைச் சுற்றியிருக்கும் காற்றும் மாசடைகிறது!

ரவி யோசித்து, "ஒருவேளை எலக்ட்ரிக் வண்டி (EV) பயன்படுத்தினா புகையும் வராது, பெட்ரோல் செலவும் மிச்சம்தானே?" என்று இடைமறித்தார்.

மகள் ஆகாஷினி புன்னகையோடு பதிலளித்தாள், "உண்மைதான் அப்பா... EV வண்டிகள் புகையைக் குறைக்கும், எரிபொருள் செலவைச் சேமிக்கும். ஆனால், அந்த பேட்டரியைச் சார்ஜ் செய்வதற்கான மின்சாரம் எங்கிருந்தோ நிலக்கரியை எரித்துத்தான் தயாரிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, EV வண்டியாக இருந்தாலும் நமது உடல் இயக்கத்தை (Physical Activity) அது முற்றிலுமாக முடக்கிவிடுகிறது!

"இயல்பாகச் செய்ய வேண்டிய நடைப்பயிற்சியை வாகன அமர்வில் முடக்கிவிட்டு, பிறகு அதே உடற்பயிற்சிக்காக ஏசி அறையில் இருக்கும் 'ட்ரெட்மில்' இயந்திரத்தைத் தேடி ஓடும் ஒரு சுழற்சியில் நாம சிக்கியிருக்கிறோம். ஆனால், இந்த முரண்பாடுகளுக்கெல்லாம் எளிமையான தீர்வு தருகிற ஒரு சாதனம் இருக்குப்பா!"

வீட்டு வாசலில் ஒரு தீர்வு

"என்ன சாதனம் அது?" ரவி ஆர்வமாகக் கேட்டார்.

கமலாவும் ஆகாஷினியும் வீட்டின் வாசலை நோக்கிக் காட்டினார்கள். அங்கே காலைச் சூரிய வெளிச்சத்தில் அமைதியாக நின்றுகொண்டிருந்தது அந்த வாகனம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழகம்: உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பிடித்த ரகசியம்!
ஆரோக்கிய சிறுகதை | a family with cycle

"இதோட 2 சக்கரங்களும், நாம செலுத்தப்போற 2 கால்களும் சேரும் போது பிறக்குற நம்ம 'மி-தி-வ-ண்-டி' (சைக்கிள்) தான் அது! இதுக்குத் தனி பராமரிப்புச் செலவும் இல்லை, பயிற்சிக் கட்டணமும் இல்லை. நமது பணமும் சேமிக்கப்படும், உடலும் இயல்பாகவே ஆரோக்கியமடைகிறது!

"மிதிவண்டி என்பது ஏதோ எப்போதாவது மட்டுமே தூசு தட்டிப் பயன்படுத்தும் பழைய வாகனம் அல்ல; நம் அன்றாட வாழ்வின் முதன்மைப் பயணப் பழக்கமாகவே (Primary Life Habit) அது மாற வேண்டும்!

அருகிலுள்ள கடைகளுக்கோ, காய்கறிச் சந்தைக்கோ, நண்பர்களின் வீடுகளுக்கோ செல்வதற்கு மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து, மிதிவண்டியை பயன்படுத்துவதை நாம் ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நமக்குத் தேவையான தினசரி உடற்பயிற்சியையும் இயல்பாகத் தந்துவிடும்!"

ஆரோக்கிய சிறுகதை | a man ride on bike vs a man ride on cycle
ஆரோக்கிய சிறுகதை | a man ride on bike vs a man ride on cycleAI Image

வருங்காலத்திற்கான ஆகச்சிறந்த சொத்து

"இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒரு வாழ்வியல் உண்மை இருக்கிறது. நாமெல்லாம் நம்முடைய பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் வீடுகளையும், வங்கி இருப்புகளையும் (Bank balance) சொத்துக்களாகச் சேர்த்து வைப்பதில் காட்டும் அதீத அக்கறையை, அவர்கள் எதிர்காலத்தில் சுவாசிக்கப் போகும் காற்றைப் பற்றியோ, அவர்களின் ஆரோக்கியப் பழக்கங்களைப் பற்றியோ சிந்திப்பதில் காட்டுவதில்லை.

"தினமும் சுறுசுறுப்பாக நடப்பதும், மிதிவண்டியைப் பயன்படுத்துவதும் பிள்ளைகளுக்கு அவர்கள் காட்டும் மிகச் சிறந்த வாழும் முன்மாதிரி (Role Model) ஆகும்! பெற்றோர்கள் காட்டும் இந்த முன்மாதிரி, பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வியல் பழக்கத்தையும் நேர்த்தியாக்கும்.

"அதே நேரத்தில், வாகனப் புகையால் மாசடையும் இந்தப் பூமியில் நாம் மிதிவண்டியை அதிகளவில் பயன்படுத்தும் போது, சுற்றுச்சூழலில் நமது ‘கார்பன் தடம்’ (Carbon Footprint) பெருமளவு குறைகிறது. வருங்காலத் தலைமுறைக்குக் கோடிக்கணக்கில் பணத்தைச் சேர்த்து வைப்பதை விட, அவர்கள் நோய்நொடியின்றி வாழ ஒரு தூய்மையான, பசுமையான பூமியையும் நல்ல வாழ்வியல் பழக்கங்களையும் விட்டுச் செல்வதுதான் நாம் அவர்களுக்குத் தரும் உண்மையான சொத்து!"

இதையும் படியுங்கள்:
குடல்வால் அழற்சி: திடீர் வயிற்று வலிக்கு இதுதான் காரணமா? தப்புவிக்க எளிய வழிகள்!
ஆரோக்கிய சிறுகதை | a family with cycle

மாற்றத்திற்கான முதல் படி

மிதிவண்டி என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாகனம் அல்ல; அது நமது தற்சார்பு வாழ்க்கை முறையின் அடையாளம்! உலக அளவில் பல முன்னணி நாடுகளின் முதன்மை அதிகாரிகள் கூட, தங்களின் ஆரோக்கியமான வாழ்வியலின் அடையாளமாக மிதிவண்டியில்தான் அன்றாடம் பயணிக்கிறார்கள்.

வாசகர்களுக்கு ஒரு எளிய சிந்தனைச் சவால்...

அடுத்த முறை தெருமுனைக் கடைக்குச் செல்ல முனையும் போது, உங்கள் கைகள் வாகனச் சாவியைத் தேடினால் ஒரு கணம் நிதானியுங்கள். உங்கள் வீட்டின் மூலையில் இருக்கும் மிதிவண்டியின் பெடலைச் சற்று மிதித்துப் பாருங்கள். தேவையில்லாத செலவுகளையும், உடல் உபாதைகளையும் தவிர்க்கும் அந்தப் பசுமையான ஆரோக்கியச் சுழற்சியை நோக்கி நமது பயணத்தைத் தொடங்குவோம்!

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com