சிறுகதை: ஆயுத பூஜையில் ஒரு தீபாவளி!

ஆயுத பூஜைக்காக வீடு சுத்தம் செய்த அப்பாவின் செல்லமகள் செய்த விபரீத வேலை குறித்த நகைச்சுவையான சிறுகதை
சிறுகதை | Daddy's Little Princess: The Hilarious Truth
சிறுகதை | Daddy's Little Princess: The Hilarious TruthImage credit: Gemini AI
Updated on: 
MM strip
MM strip

"ஆளுமா டோலுமா

ஐசாலங்கடி மாலுமா

தெறிச்சு கலீச்சுனு

கிராக்கி விட்டா சாலுமா

அறிக்கல்லு கரிக்கல்லு

கொத்துவிட்டா கலக்கலு

பளுச்சினு பளபளக்குது

மிட்டா மேல லோக்கலு

டமுக்குனா டுபுக்குனா

டோலக்கதாம் குமுக்குனா

டுபுக்குனா டுமாங்கோலி

எப்டி போனா எனக்கென்னா

கருக்குனா முறுக்குனா

தவுட்டையதான் இறக்குனா

இருக்குனா சரக்குனா

ஒண்டியாந்தா உனக்கின்னா

ஆளுமா டோலுமா

ஆளுமா டோலுமா..." ஆஆஆஆஆ......

"என்ன கவி, பாட்டு சத்தம் எல்லாம் பலமா இருக்கு? வீட்டுல யாரும் இல்லையா??"

மைண்ட் வாய்ஸ் - (தெரியாம இந்த ஜன்னலைத் திறந்து வெச்சிட்டோம், அய்யோ இந்த கீதா ஆன்ட்டி வேற இப்போ கேள்வி மேல கேள்வியா கேட்பாங்களே? எப்படியாவது தப்பிச்சு ஓடிடு கவி.)

"ஹே கவி, என்ன யோசனை??"

"ஹாய் ஆன்ட்டி, அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஆமா, ஆன்ட்டி வீட்டுல யாரும் இல்ல..." ஹீ ஹீ ஹீ... ஒரு அசடு சிரிப்பு சிரித்தாள் கவி.

"அதான பார்த்தேன். யாராவது இருந்திருந்தா நீ வீட்டுல இருக்குறது தெரியாதே....."

"என்ன கவி, இன்னைக்கு உனக்கு ஸ்கூல் இல்லையா?"

"ஆமா ஆன்ட்டி, ஆயுத பூஜைக்காக இரண்டு நாள் முன்னாடியே லீவு விட்டிருக்காங்க..."

"சரி மா...."

"என்ன பண்ணிட்டு இருக்க இப்போ? சாப்பிட்டீயா நீ?"

"சாப்பிட்டாச்சு ஆன்ட்டி... ஆயுத பூஜை வருதுல, அதான் வீடு கிளீன் பண்ணிட்டு இருக்கேன், அப்படியே சாமான்கள வாஷ் பண்ணி காய வெக்கலாம்னு இருக்கேன்...."

"ஏன் வீட்டுல அப்பா, அம்மா வந்ததுக்கப்புறம் இத செய்யலாமே நீ? ஏன் தனியா பண்ற?"

"எனக்கு எக்ஸ்ட்ராவா லீவு விட்டிருக்காங்க ஆன்ட்டி, ஆனா அவங்களுக்கு அப்படி இல்லையே. அதான் என்னால முடிஞ்சத பண்றேன், மிச்சத அவங்க ரெண்டு பேரும் அப்புறமா பண்ணிப்பாங்க ஆன்ட்டி..."

"சரிடிமா, பார்த்து பண்ணு. கைல, காலுல எதுவும் போட்டுக்காத...."

"சரி ஆன்ட்டி..."

"சரி கெளம்புறேன் கவி. என்னடா ஒரே பாட்டு சத்தமா கேட்குதே, அதான் எட்டி பார்த்துட்டு போலாம் வந்தேன்..."

"சரி ஆன்ட்டி, பை..."

மைண்ட் வாய்ஸில் - (ஐ ஜாலி, கீதா ஆன்ட்டி கிளம்பிட்டாங்க. இல்லனா எக்ஸாம் பத்தி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க.)

"ஹே ஆலுமா ஆஆஆஆஆ....."

"ஆமா, கேட்கணும்னு நினைச்சேன். ஹாஃப் இயர்லீ எக்ஸாமுக்கு நல்லா பிரிப்பேர் பண்ணிட்டியா நீ??"

மைண்ட் வாய்ஸ் - (அதான பார்த்தேன், என்னடா பினிஷிங் டச் குடுக்காமப் போறாங்களேனு பார்த்தேன், தோ இப்போ கேட்டுட்டாங்க...)

"அதுவா ஆன்ட்டி, நல்லா படிக்கிறேன்..."

"சரி பார்த்து இரு, ஏதாவது தேவைனா கூப்பிடு...."

"அப்பாடி போயிட்டாங்க. ஒரு பாட்ட நிம்மதியா பாட விடுறாங்களா பாரு...."

"இப்ப பாடலாம்...."

"ஆலுமா.... ஆஆஆஆ...."

இரண்டு மணி நேரம் கழித்து -

சிறுகதை | Kavi's Secret Ayudha Puja Cleaning Mission
சிறுகதை | Kavi's Secret Ayudha Puja Cleaning MissionImage credit: Gemini AI

வீட்டின் பின்புறத்தில் சமையல் சாமான்களை காய வைத்துக்கொண்டும், மிக்ஸி, கிரைண்டரைத் துடைத்துக்கொண்டும் வேலை செய்துகொண்டிருந்தாள் கவி...

பக்கத்து வீட்டு ஆன்ட்டி அவர்கள் வீட்டின் பின்புறத்தில் இருந்து கவி செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.

"என்ன கவி, அழகா வேலையெல்லாம் செஞ்சி முடிச்சிட்ட? என் கண்ணே பட்டதும் டி.."

"அப்படியே உன் ஃபிரண்ட் உஷாக்கும் சொல்லிக்குடு. சரியான தீனி மாடு, எப்பப்பாரு தின்னுட்டு தூங்குறா பாரு. ராஜி ரொம்ப லக்கி, உன்ன மாதிரி ஒரு பொண்ண பெத்ததுக்கு..."

அதே சமயம் உஷா வெளியில் வந்து நின்றாள்.

"அம்மா, எதுக்கு என்ன திட்டுற? அவ எதோ அதிசயமா செஞ்சிட்டா, அதுக்கு போய் ஓவரா புகழ்ற? இவ லட்சணத்த ராஜி ஆண்ட்டிகிட்ட கேட்டாச் சொல்லப் போறாங்க. இப்பகூட இவ ஏதாவது ஏடாகூடமா பண்ணிருப்பானு தோணுது" என்று கூறி கவியை ஒரு சந்தேகப் பார்வையைப் பார்த்தாள் உஷா....

"அடிக் கழுதை, உன்ன மாதிரி அவள நினைச்சியா? அவ வீட்டுல ரெண்டு பேரும் வேலைக்கு போய்ருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி எவ்வளவு பொறுப்பா நடக்குறா. நீயும்தான் இருக்கியே! நான் லீவு போட்டு வேலைய செய்றேன், நீ என்ன பண்ற? தின்னுட்டு, தின்னுட்டு தூங்கிட்டு இருக்குற. இவள மாதிரி பொண்ண பெத்திருக்கணும்...."

"ஐயோ ஆன்ட்டி, எனக்கு வெக்க வெக்கமா வருது. எனக்கு புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது. இருந்தாலும் பெரியவங்க நீங்க பாராட்டுறீங்க, தல வணங்கி ஏத்துக்குறேன்" என்று கூறி, கீதா அசந்த நேரம் உஷாவைப் பார்த்து பழிப்பு காட்டினாள் கவி...

"ஆன்ட்டி, அப்படியே என் மம்மி கிட்ட சொல்லுங்க ஆன்ட்டி. எப்பப்பாரு திட்டித்தே இருக்காங்க. அவங்களுக்கு நான் கிடைச்சது கடவுள் அருள். இப்படி நாலு வார்த்தை எக்ஸ்ட்ராவா சொல்லுங்க ஆன்ட்டி..."

"கண்டிப்பா செல்லம்..."

"சரி ஆன்ட்டி, ரொம்ப டையர்டா இருக்கு. நான் போய் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கப் போறேன்..." கவி.

"இரு கவி, சூடா சிக்கன் குழம்பு செஞ்சிருக்கேன். நீ இத சாப்ட்டு தூங்கு மா..."

"அம்மா, அது எனக்கு செஞ்சு வெச்ச சிக்கன். அவளுக்கு ஏன் குடுக்குறீங்க?" என்று கவியைப் பார்த்து முறைத்துக்கொண்டே கேட்டாள் உஷா.

"பரவால ஆன்ட்டி, அவ சாப்பிடட்டும். எனக்கு மம்மி ஆல்ரெடி செஞ்சி வெச்சிருக்காங்க. எனக்கு வேணாம்" என்று முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு கூறினாள்...

"இருக்கட்டும் கவி. அதான் அவ்வளவு செஞ்சு வெச்சிருக்கேன். இவ என்ன சட்டி ஃபுல்லா வெச்சு தின்னவா போற? இங்கயே இரு, ஆன்ட்டி எடுத்துட்டு வரேன்."

"சரி ஆன்ட்டி.."

கீதா உள்ளே சென்றவுடன்....

கவி மற்றும் உஷா இரு துருவங்களாய் எதிர் எதிரே நின்றுகொண்டு ஒருத்தரை ஒருத்தர் முறைத்துக்கொண்டிருந்தார்கள்....

உஷா ஆரம்பித்தாள்,

"ஏன் இப்படி பண்ண?"

"எப்படி பண்ண?" கவி.

"இப்போ பண்ணிட்டு இருக்கியே, அத கேட்குறேன்..." உஷா.

"ஓ அதுவா, ச்சும்மா போர் அடிக்குதுனு செஞ்சேன், அவ்வளவுதான்..." கவி.

"ஹே கவி, நீ அந்த அளவுக்கு நல்லவ இல்லையே? உன்னப் பத்தி எனக்கு தெரியாதா? நேத்து பேசும்போது அடுத்த வாரம் போகப் போற டூர்க்கு அம்மாகிட்ட இருந்து எப்படியாவது காசு வாங்கணும் சொன்னீயே, அதுக்குத்தான இந்த அலப்பற...."

"ஹீ ஹீ ஹீ, கண்டுபிடிச்சிட்டியாடி???"

"தூ..."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சிங்க வேட்டை (சேட்டை) வேட்டைக்கார ஜம்பு 2.0!
சிறுகதை | Daddy's Little Princess: The Hilarious Truth

"பின்ன நீ எல்லாம் என்னைக்கு வேலை செஞ்சிருக்க சொல்லு?" உஷா.

"சரி விடுடி.."

"எப்படி டி விட முடியும்? உன்னால என் அம்மா என்ன திட்டுறாங்க பாரு..."

"விடுடி, ஆன்ட்டி கிட்ட நான் பேசுறேன்..."

"என்ன பேசப் போற நீ??"

"உனக்கும் டூர்க்கு காசு கேட்கிறேன் டி..."

"ஹும், சரி டீல்..."

"ஹே, ச்சும்மா இரு, ஆன்ட்டி வராங்க...."

"சரி சரி..."

"இந்தா கவி, இதுல சிக்கன் குழம்பு இருக்கு. கூடவே நாட்டு கோழி முட்டை ஆம்லெட் வெச்சிருக்கேன். வளரப்புள்ள, நல்லா சாப்பிடு மா..."

"சரி ஆன்ட்டி, தாங்க்ஸ். பை உஷா..."

"பை பை..."

மாலை ஆறு மணி அளவில் -

"என்ன ராஜி, உன் ஃபிரண்ட் கீதா கூட அவ்வளவு நேரம் பேச்சு?" என்றார்.

"ஐயோ, அத ஏங்க கேட்குறீங்க? உங்க பொண்ணு உலக மகா அதிசயமா இன்னைக்கு ஏதோ வீட்டு வேலை செஞ்சிருக்கா. அத தான் அவ ஆஹா, ஓஹோன்னு ஒரே பாராட்டு மழை இவளுக்கு."

"அப்படியா குட்டிமா? என்னடா தங்கம், நீ ஏன் இதெல்லாம் பண்ற? எதுக்கு நாங்க இருக்கோம்? இத லீவுல பண்ணிருப்போம்ல...."

"ஆமா டாடி, நீங்க ரெண்டு பேரும் ஆபீஸ்ல அவ்வளவு வேலைய செஞ்சிட்டு வரிங்க. அதான் நான் இன்னைக்கு பண்ணேன். உங்க ரெண்டு பேருக்கும் ஹெல்ப்பா இருக்குமேன்னு..."

"ஆமா, ஊருல எந்த பொண்ணும் வேலை செய்யல, உங்க பொண்ணு மட்டும் வேலை செஞ்சிட்டானு ஓவரா பேசாதீங்க."

"ஆமா, என் பொண்ணு எனக்கு தேவதை. அவ எந்த வேலையும் செய்யக்கூடாது எனக்கு..."

"ஆமா, உங்க பொண்ணு ஒரு வேலை செய்றேன்னு சொல்லி எனக்கு ஓராயிரம் வேலைய வச்சிருப்பா. கிச்சன்ல போய் பார்த்தாத்தான் தெரியும்..."

"ஏங்க, நைட் தோசை, தேங்காய் சட்னி ஓகேவா?"

"என்ன வேணாலும் பண்ணு. இதே கேள்வியை டெய்லி கேட்பியா? நீ என்ன செஞ்சாலும் நான் சாப்பிடப் போறேன்..."

"குட்டிமா, கால நீட்டுமா டாடி மேல. இன்னைக்கு நிறைய வேல செஞ்சிருக்க, கால் வலிக்கும் ல உனக்கு..."

"ஆமா, இத்தனை வருஷமா வீட்டுலையும் சரி, வெளியேவும் சரி, வேலை செஞ்சிட்டு வந்த எனக்கு ஒரு தடவையாவது கால அமுக்கி விட்டுருக்கீங்களா?"

"ராஜி, இவ குழந்த. இவகூட போய் போட்டி போடுற நீ, சீக்கிரம் சமையல பண்ணு. அப்படியே குட்டிமாக்கு நெய் தோசை செய்..."

"ஆமா, அப்பாக்கும், பொண்ணுக்கும் வடிச்சு கொட்டத்தான் எங்க வீட்டுல பெத்து என்ன இங்க அனுப்பி வெச்சிருக்காங்க பாருங்க..."

"சரி சரி, பொலம்புறத விட்டுட்டு வேலைய பாரு, வேலைய பாரு...."

"ஹுக்கும்...."

"பாத்து மம்மி, கழுத்து சுளிக்கிக்கப் போகுது..."

"இருடி, வரேன். வந்து வாய ஒடைக்குறேன்...."

"ஹீ ஹீ, எங்க ஒடப் பார்க்கலாம்...."

"எல்லாம் உன் அப்பா இருக்குற கொழுப்புல பேசுற. அவரு இல்லாத நேரத்துல என்கிட்ட தான வந்தாகணும். ‘மம்மி, இத செஞ்சி குடு, அத செஞ்சி குடு’ன்னு. அப்போ இருக்குடி உனக்கு....."

தன் மகளைத் திட்டிக்கொண்டே கிச்சனுள் நுழைந்தார் ராஜி....

"அட, பரவாலயே, இவ நல்லாதான் கிளீன் பண்ணிருக்கா. கீதா சொன்னது கரெக்ட்தான்..."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
சிறுகதை | Daddy's Little Princess: The Hilarious Truth

"ஹும், இனிமேல் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி ஏதாவது சாக்லேட், பிஸ்கட் வாங்கிக் குடுத்து இவளையே கிளீன் பண்ண வைக்கணும்..."

"சரி, நாம சட்னிய அரைப்போம்..."

"ச்ச, இது வேற.."

"ஏங்க, உங்ககிட்ட சொல்லி ஒரு வாரம் ஆச்சு, நம்ம எலக்ட்ரிஷன் வர வெச்சு இந்த கிச்சன் பிளக் பாயிண்ட் சரி பண்ணச் சொன்னேன். இன்னும் நீங்க அந்த வேலைய செய்யலையா??"

"ஆஹா மாட்டுனோம் இவ கிட்ட.... டேய், எப்படியாவது சமாளி..."

"இல்லமா, அந்த எலக்ட்ரிஷன் ஊருக்கு போயிருக்கான்..."

"ஏன் இப்படி கேவலமா பொய் சொல்றீங்க?"

"வர வழில அவன பார்த்தேன். ஏன் வரலன்னு கேட்டதுக்கு, நீங்க ஏதும் சொல்லலன்னு சொன்னான்..."

"ஐயோ போச்சு, நல்லா மாட்டுனேன் இப்போ...."

"அது வந்து, அதுவா மா, நான் சொல்லிட்டேன்னு நினைச்சேன். இப்போதான் புரியுது, அது கனவுல சொல்லிருக்கேன் போல..."

"இப்படி மாத்தி மாத்தி பொய் சொல்லாதீங்க. உங்கள பார்த்துத்தான் உங்க பொண்ணும் நல்லா பொய் பேசுறா..."

"சரி, நானே அவன்கிட்ட சொல்லிட்டேன். நாளைக்கு வரேன்னு சொன்னான்..."

"அப்போ சரி ராஜி...."

"கவி, இங்க வா..."

"என்ன மம்மி??"

"இந்த மிக்ஸிய கொண்டுபோய் டிவி பக்கத்துல இருக்குற பிளக் பாயிண்ட் யூஸ் பண்ணி இத அரைச்சிட்டு வா..."

"போ மம்மி, நான் செய்ய மாட்டேன்....."

"செய்யலனா போ, வெறும் சர்க்கரைய தொட்டு சாப்பிடு...."

"என்னது சர்க்கரையா??"

"அப்போ குடு மம்மி, நானே கொண்டு போய் அரைச்சிட்டு வரேன்...."

"அப்படிவா வழிக்கு..."

"டாடி, இந்த பிளக் பாயிண்ட் யூஸ் பண்ணிக்கிறேன்..."

"சரி குட்டிமா...."

சட்னி அரைக்க மிக்ஸி ஆன் செய்யும் பொழுது,....

டமால்.... (பட்டாசு வெடித்தது போல் ஒரு சத்தம்)

அந்த சத்தத்துடன் நெருப்பும் சேர்ந்து மிக்ஸியில் இருந்து வெளி வந்தது...

"குட்டிமா, டாடி கிட்ட ஓடிவா....."

"கவி, என்னாச்சு?"

சிறுகதை | The Mixer Grinder Explosion
சிறுகதை | The Mixer Grinder ExplosionImage credit: Gemini AI

"ஒன்னும் இல்ல, நான் நல்லா இருக்கேன்..."

"ஏங்க, எப்படி இந்த மிக்ஸி வெடிச்சது?"

"எனக்கும் தெரியலயேடி. நல்லவேல, குழந்தைக்கு எதுவும் ஆகல...."

அதற்குள் பக்கத்து வீட்டு பெண் கீதாவும் கவி வீட்டிற்கு ஓடி வந்தார், இங்கு வெடித்த சத்தத்தைக் கேட்டு.

"ஹே ராஜி, என்னாச்சு? பயங்கரமா சத்தம் கேட்டுச்சு...."

நடந்த நிகழ்வுகளை விளக்கிக்கொண்டிருந்தார் கீதாவுக்கு....

"ஹே கவி, உனக்கு எதுவும் ஆகல தான?" உஷா.

"நான் நல்லா இருக்கேன் உஷா...."

"ராஜி, இங்க வா..."

"என்னங்க, என்னாச்சு? ஏன் இப்படி கத்துறீங்க?"

"இங்க பாரு, இந்த மிக்ஸிய..."

"ஏன், என்னாச்சு?"

"பாரு, மிக்ஸி மோட்டார்க்குள்ள இருந்து தண்ணியா கொட்டுது..."

"ஆமா, இது எப்படிங்க ஆச்சு??"

"என்ன கேட்டா எனக்கு எப்படி தெரியும்? நீதானே யூஸ் பண்ற?"

"ஆமாங்க, ஆனா நான் தண்ணி எதுவும் ஊத்தலையே??"

"அப்போ எப்படி ஆச்சு இது??"

"அன்பு அண்ணா, காலைல நம்ம கவிதான் இத தொடைச்சிட்டு இருந்தா. ஆனா அவ இதுல தண்ணிய ஊத்தலையே?"

"குட்டிமா, இங்க வாடா..."

"டாடிகிட்ட எதுவும் மறைக்காம சொல்லு. என்னாச்சு??"

"டாடி, காலைல எல்லா சாமான்கள வாஷ் பண்ணிட்டு இருந்தேன். அப்போ மிக்ஸிய பார்த்தேன், கொஞ்சம் தூசியா இருந்துச்சு. சரி, துணி வெச்சு தொடைச்சேன். நல்லா கிளீன் ஆயிடுச்சு. அப்புறம் மிக்ஸில கேப் கேப்பா இருக்குல டாடி, அதுக்குள்ளயும் ஒரே தூசியா இருந்துச்சு. கிளீன் பண்ணலாம் பார்த்தா துணி உள்ள போகல. அதான் கிச்சன் சிங்க்ல மிக்ஸிய வெச்சு, குழாய்ய திறந்து விட்டேன். அப்புறம் தூசி போய்டுச்சு டாடி..."

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காணாமல் போன சங்கிலி...!
சிறுகதை | Daddy's Little Princess: The Hilarious Truth

உஷா மைண்ட் வாய்ஸில் - (கூட மிக்ஸியும் போய்டுச்சு) என்று வாயை மூடிக்கொண்டு சிரித்தாள்...

"ஏய், சிரிக்காத. சும்மா இருடி" என்றார் கீதா...

உஷா மற்றும் அவள் அம்மா வாயை மூடிக்கொண்டு சிரித்தார்கள். கூடவே ராஜி சிரிப்பை அடக்கிக்கொண்டு இருந்தார்....

இங்கோ, தன்னுடைய செல்ல மகள் செய்த வேலையைக் கண்டு ஸ்தம்பித்துப் போய்விட்டார் அன்பு.....

"டாடி, என்னாச்சு உங்களுக்கு??"

"ஒன்னும் இல்ல குட்டிமா...."

"சரி டாடி..."

"குட்டிமா, நீ வேற எதையாவது இந்த மாதிரி தண்ணீ ஊத்தி வாஷ் பண்ணியா??"

"ஆமா டாடி..."

"ஐயோ, எதுல தண்ணிய ஊத்தி வெச்ச??"

"நம்ம கிரைண்டர்ல ஊத்தி வெச்சேன் டாடி, வேற எதுவும் பண்ணல..."

"குட்டிமா, இதுக்கும் மேல வேற எதுவும் பண்ண வேணாம் மா. எல்லாம் முடிஞ்சது...."

இங்கு மற்றவர்கள் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க...

"குட்டிமா, இனிமேல் நீ ஆயுத பூஜைக்கு எதுவும் பண்ண வேணாம் மா. முடிஞ்சா ஆயுத பூஜையே நாம கொண்டாட வேணாம்" என்று தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்...

இவரின் புலம்பலைப் பார்த்து இன்னும் அதிகமாக சிரித்து விட்டனர் மற்ற மூவரும்......

(இதான் டாடி'ஸ் லிட்டில் பிரின்ஸஸ் போல).... 😃

logo
Kalki Online
kalkionline.com